முக்கிய செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு அழைப்பு..

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், பொதுச்செயலாளர் சாம்பத் ராய் மற்றும் பொருளாளர் ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) மாலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது புதன்கிழமை நடைபெற்ற அறக்கட்டளையின் முதல் கூட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பும் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் கடந்த 5-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ராமர் கோயில் அறக்கட்டளையில் 15 உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்து, அவர்களது பெயர்களையும் வெளியிட்டார்.

அதில் மூத்த வழக்குரைஞர் கே.பராசரன், ஜகத்குரு சங்கராச்சாரியார் ஜோதிஷ்பீடாதீஸ்வர் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதிஜி மகராஜ், ஜகத்குரு மத்தவாச்சாரியார் சுவாமி விஷ்வ பிரசன்னதீர்த்தஜி மகராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இதையடுத்து, தில்லியில் மூத்த வழக்குரைஞர் கே.பராசரன் இல்லத்தில் ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், பொதுச்செயலாளராக சாம்பத் ராய், பொருளாளராக ஸ்வாமி கோவிந்த் தேவ் கிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கோயில் கட்டுமானக் குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்.

கட்டுமானப் பணிகளுக்கான நன்கொடையைப் பெற அயோத்தியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கணக்கு தொடங்க முடிவெடுக்கப்பட்டது.

மத்திய அரசின் பிரதிநிதியாக உள்துறை அமைச்சக கூடுதல் செயலர் ஞானேஸ்குமார், உத்தரப் பிரதேச மாநில அரசின் பிரதிநிதியாக அவினாஷ் அவாஸ்தே, அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.