ஆயுர்வேதா,சித்தா உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு நீட் : மு.க.ஸ்டாலின் கண்டனம்…


சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் நுழைவுத்தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

“மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வை, பல்வேறு மாநிலங்களில் உள்ள சமுதாய அமைப்புகளும், மாணவர்களும் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவை முற்றிலுமாகச் சிதைத்துவிட்ட மத்திய அரசு, இப்போது இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளில் சேருவதற்கும் நீட் தேர்வு கட்டாயம் என்றும், நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டனத்துக்குரியது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே நீட் தேர்வை அவசர அவசரமாக திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையை அத்துமீறிப் பறித்துவிட்ட மத்திய அரசு இப்போது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கும் நீட் தேர்வை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடுவது சமூகநீதிக் கொள்கைக்கும், சமத்துவத்திற்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் முற்றிலும் விரோதமானது மட்டுமல்ல, மத்திய அதிகாரக் குவியலுக்கான தொடர் வேட்டையாக கருதப்படுகிறது.

கிராமப்புறங்களுக்குத் தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில், ஏற்கனவே நீட் தேர்வு மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு, இப்போது கிராமப்புற சுகாதாரத் தேவைகளுக்காக எஞ்சியிருக்கும் சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளின் மீதும் கை வைப்பது எதேச்சதிகாரமானது.

அதுமட்டுமின்றி, கிராமப்புற மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன என்ற பாஜகவின் உள்நோக்கத்தையும் மக்கள் விரோத எண்ணத்தையும் இது வெளிப்படுத்துகிறது. ஆகவே, சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உத்தரவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

கிராமப்புற வளர்ச்சியில், அங்குள்ள மக்களின் சுகாதாரத் தேவைகளில் மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிப்பது மட்டுமின்றி, மருத்துவப் படிப்பிற்கும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் விதத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரவேண்டும்”

என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.