
அந்த இரவொன்றில் நீ எனக்காக காத்திருந்தாய்
நான் கனமழையில் நனைந்து கொண்டு
உன்னைக் பார்க்கும் ஆவலில் நடுங்கிக் கொண்டிருந்தேன்
உனக்கும் எனக்குமிடையில் மழை பெய்த வண்ணமிருந்தது
மழை நிற்கும் கணம் நோக்கி காத்திருந்தேன் நீயும்
மழைவிட பிரார்த்திப்பதாகச் சொன்னாய்
முற்றிலும் மழை நின்றது பலித்துவிட்ட உன் பிரார்த்தனையில்
உன்னிடம் வந்தேன் மழையாக வந்த
என்னில் பின் இரவெல்லாம் முழுக்க நனைந்து போனாய்…
நம் அறையெங்கும் மழைமேகங்கள் மிதந்து கொண்டிருந்தன
பல்லி… விட்டில்… விளையாட்டு

உயிர் போகும் அபாயத்தைக்
கணக்கில் கொள்ளவில்லை
ஒளிப் பைத்தியத்தில்
பல்லி நிற்பதறியாது
மாயையில் சிக்கியது உணராது
மேலும் மேலும் ஒளி மீது விழுந்து
புரள்கிறது
எக்கணத்திலும் விழுங்கிவிடும் விவேகத்தில்
திக்கற்றுப் பறக்கும் விட்டிலின் மீது
பாய்ந்துகொண்டே இருக்கிறது
பல்லி.