___________________________________________________________________________________________________________
“இந்தப் புதிய ஊதிய உயர்வு மூலம் 47 லட்சம் பணியாளர்களும், 53-லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். தவிர சேவைப் பணியில் உள்ள 14 லட்சம் ராணுவ வீரர்களும், ஓய்வூதியம் பெறும் 18 லட்சம் முன்னாள் ராணுவத்தினரும் பயன் பெறுவார்கள். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டதன் மூலம், தனியார் துறையைக் காட்டிலும் தற்போது அரசு ஊழியர்களின் ஊதியம் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே இதற்கு எதிராக யாரும் போர்க்கொடி உயர்த்த வேண்டாம்”
– இது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் வேண்டுகோள்.
7-வது ஊதியக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சம்பள ஊயர்வு பொதுமக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சருக்குத் தெரிகிறது. இந்திய சுதந்திர வரலாற்றில் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அறிவித்தப்பின் ஒரு நிதியமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தது இதுவே முதல்முறை.
காரணம் 120 கோடி மக்கள் உள்ள ஒரு நாட்டில் சுமார் ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவித சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பணிக்கொடை 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தவிர ஏகப்பட்ட சலுகைகள். அவற்றை எழுத முனைந்தால் பெரிய கட்டுரையாகி விடும்.
ஆனால் இந்தச் சம்பள உயர்வு போதவில்லை என்று போராட போகிறார்களாம். உண்மையில் இந்தக் குறைந்த சம்பளத்தில் அவர்கள் வேலை செய்ய விருப்பமில்லை என்றால் தாராளமாக ராஜினாமா செய்துவிட்டு தனியார் துறையில் வேலைக்குப் போக வேண்டியதுதானே!. அதை ஏன் அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்?.
7-ஆவது சம்பள கமிஷன் பிரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு தமது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அறிவிக்கும். இதனால், ஏற்கனவே 4.48 லட்சம் கோடியாக உள்ள தமிழக அரசின் கடன்சுமை பயங்கரமாக அதிகரிக்கப்போகிறது. அதை ஈடுகட்ட ஜெ.அரசு என்னவெல்லாம் செய்யப் போகிறதோ பயமாக உள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் மத்திய-மாநில அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் இதரப் படிகளின் உயர்வை குறை சொல்லவில்லை. 120 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் வெறும் ஒருசதவிதம் பேர் மட்டுமே அரசு ஊழியர்கள். மீதமிருக்கும் 119 கோடி பேர் சொந்தமாக தொழில் செய்து கொண்டும், தனியார் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் சிறு சிறு வணிக நிறுவனங்களிலும் நேரம்காலம் இல்லாமல் எந்தப் பணிப்பாதுகாப்பும் இல்லாமல், சம்பள உயர்வும் இல்லாமல் உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டு, மன உளைச்சலோடு உழைத்து வருகின்றனர்.
7 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு 12 மணிநேரம் உழைக்கும் செக்யூரிட்டிகள், 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் தினக்கூலிகளாக கடைகளில் வேலை பார்க்கும் பெண் பிள்ளைகளும் இளைஞர்களும் ஏராளம் ஏராளம். இவர்களைப்போல் விவசாயக் கூலிகள், ஓட்டலில் வேலை செய்யும் ஊழியர்கள், சாலை ஓர வியாபாரிகள் என இங்கே பட்டியிலிட முடியாத லட்சக்கணக்கான தினக்கூலிகள் வருமானம் போதாமல் வாய்க்கும் வயிற்றுக்கும் போராடிக் கொண்டிருக்கின்றனர். தனியார் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்காக பெண் தொழிலாளர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி துன்பப்பட்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்குத் தனியாக ஒரு விலைவாசி பட்டியலும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கென விலைவாசி பட்டியலும் இங்கே இல்லை. மாதம் 80 ஆயிரம் சம்பாதி்க்கும் அரசு ஊழியருக்கும், 8 ஆயிரம் சம்பாதிக்கும் தனியார் ஊழியருக்கும் விற்கப்படும் பொருள்களின் விலை ஒன்றுதான். அரசு ஊழியர்களுக்காவது கேண்டீன், கூட்டுறவு வசதிகள் மற்றும் இன்னபிற வசதிகளும் சலுகைகளும் கிடைக்கின்றன. இவற்றில் எந்த ஒரு வசதி வாய்ப்பும் இல்லாத துர்பாக்கியவாதிகள்தான் தனியார் ஊழியர்கள். அரசுகள் இந்தப் பாரபட்சமான போக்கை ஓரளவுக்காவது குறைக்கவேண்டும்.
ஆனால், இவர்களது வாழ்நிலை குறித்தும் இவர்கள் வாங்கும் மிகக்குறைந்த சம்பளம் குறித்தும் எந்த அரசுக்கும் அக்கறையில்லை,கவலையில்லை!. வேஜ் போர்டு என்ற ஒன்று இருப்பதாக சொல்கிறார்கள். அது செயல்படுவதற்கான அறிகுறியே இல்லை. இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் ஒழுங்காக வரி செலுத்துவோர் இந்த 99 சதவித தனியார் ஊழியர்கள்தான். வங்கிக் கடனை திருப்பி செலுத்துவோர் இவர்கள்தான், இன்னபிற அரசின் சட்டங்களை- நாட்டின் இறையாண்மையை மதித்து நடப்போரும் இவர்கள்தான்.
மழையாக இருந்தாலும், கடும் வெயிலாக இருந்தாலும் நீண்டநேரம் வரிசையில் நின்று வாக்களிப்பது இந்த மக்கள்தான். 99 சதவிதமாக இருக்கும் இந்த மக்கள் தங்களுக்கு எதிராக திரண்டு விடுவார்களோ? என்ற அச்சம் அரசுகளுக்கு இல்லை. ஏனென்றால், இவர்கள் சங்கமாக திரளமுடியாத உதிரித் தொழிலாளர்கள் என்பதால்தான்.
சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலை, சாதி ஆணவப்படுகொலை, தமிழீழத்தில் சிங்களர்களின் இன ஒடுக்குமுறை, இடஒதுக்கீடு மறுப்பு உள்பட ஏராளமான பிரச்னைகளுக்கு நாம் எதிர்ப்புக்குரல் கண்டிப்பாக கொடுக்கவேண்டும். போராட வேண்டும். மாற்றுக்கருத்து இல்லை!
ஆனால் இங்கே பலர் மந்தை மனோபாவத்துடன் சமூக கலாச்சார-பண்பாட்டு விசயங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். அவ்வாறு இல்லாமல் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளான வேலையின்மை, குறைந்த சம்பளத்துக்கே உத்தரவாதமில்லாத நிலை, உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட பொருளாதார பிரச்னைகளை முன்வைத்து போராட முன்வரவேண்டும், எழுதவேண்டும், விவாதிக்க வேண்டும்.
மத்திய-மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தையும், பஞ்சப்படியையும் மட்டும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருப்பதால் விலைவாசி உயர்ந்து பல்வேறு சமூக சீர்கேடுகள் ஏற்படும். தனியார் நிறுவன ஊழியர்கள் கடன் சுமை தாங்காமல் வறுமைக்குப் பலியாகும் அவலநிலை அதிகரிக்கும் என்பதை ஏனோ அரசுகள் உணர மறுக்கின்றன. ஆனால் என்றாவது ஒருநாள் 99 சதவிதம் இருக்கும் தனியார் ஊழியர்கள் பொறுமையிழந்து தன்னெழுச்சியாக திரண்டு போராடும் நிலை ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது!
கடந்த கால உலக நடப்புகளே இதற்குச் சான்று. கடன்சுமை, வேலையின்மை, விலைவாசி ஏற்றம், இரக்கமற்ற பொருளாதார வேறுபாடுகளால் எதிர்காலம் பொய்த்துவிடுமோ? என்ற அச்சத்தில் 2010 டிசம்பரில் துனிசியாவில் தொடங்கிய இளைஞர்களின் தன்னெழுச்சி 2011-ல் லண்டன், எகிப்து, அரபு நாடுகளிலும் பின்னர் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட்டில் படர்ந்து கதிகலங்கவைத்தது. இந்தப் போராட்டங்களை நமது அரசுகளால் எளிதில் மறுதலித்து விடமுடியாது.
அரசு ஊழியர்களை குறை சொல்வது கட்டுரையின் நோக்கம் அல்ல. தனியார் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் ஊழியர்களையும் கொஞ்சம் கவனத்தில் கொண்டு அவர்களின் பணிப்பாதுகாப்பு, ஊதியம் முதலானவற்றில் அரசுகள் கவனம் செலுத்தி அவர்களை நிம்மதியான வாழ்க்கைச் சூழலில் வாழவிடுங்கள் என்பதுதான் இந்தக்கட்டுரையின் நோக்கம்.
– பாலு தென்னவனின் முகநூல் பதிவில் இருந்து நன்றியுடன்
______________________________________________________________________