தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் வணிக உரிமம் விதிமுறைகளுக்குட்பட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் ஜனவரி 1ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தமிழக அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சோதனைகளில் தற்போது வரை 198 மெட்ரிக் டன் அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்ப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அறிவுறுத்துதல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்கள் மீது சட்ட விதிகளின் படி தாக்கீது வழங்கி நடவடிக்கைகள் தொடரவும் வணிக உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.