பெங்களூரில் 10,000 வாக்காளர் அட்டைகள் பறிமுதல் தேர்தலுக்கு முன் பரபரப்பு..


பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்பதாயிரம் வாக்காளர் அடையாள அட்டைகள் கேட்பாரின்றிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜலஹள்ளி என்ற இடத்தில் உள்ள மஞ்சுளா நஞ்சமுரி என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ராகேஷ் என்பவர் குடியிருந்து வருகிறார். இந்தக் குடியிருப்பில் கட்டுக்கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்தக் கட்டுகளின் மேல் குறிப்பிட்ட பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகத்தில் வரும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், இதுபோன்று அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட பகுதி ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் வருகிறது.

வாக்காளர் பட்டியலில் மேலும் ஒருலட்சம் பேரை சேர்த்ததற்கான அடையாளச் சான்றுகளும் அப்போது கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கர்நாடக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட குடியிருப்பில் இருந்த வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அங்கிருந்த மடிக்கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்கப்பட்டது பற்றியும் விசாரணை நடைபெற்று வருவதாகச் சஞ்சீவ் குமார் தெரிவித்தார்.
வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இருப்பதாக பி.ஜே.பி-யும் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளன.