ஓசூர் – பெங்களூரு இடையே ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் – பெங்களூரு மற்றும் தருமபுரி இடையே மின்சார ரயில் இயக்குவதற்கு ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் 2017-18 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த மின்மயமாக்கப் பணிகள் தற்போது ஓசூர் வரை நிறைவு பெற்றுள்ளன. இதில் ஓசூர் – பெங்களூரு மெஜஸ்டிக் இடையே 55 கி.மீ. தூரம் உள்ள ரயில் பாதையும் மற்றும் ஓசூர் – யஸ்வந்த்பூர் இடையே 60 கி.மீ. தூரம் உள்ள ரயில் பாதையும் மின்மயமாக்கப்பட்டுள்ளன..
மேலும், தருமபுரி வழித்தடத்தில் ஓசூர் ரயில் நிலையம் முதல் பெரியநாகதுணை ரயில் நிலையம் வரையும் ரயில் பாதை மின்மயமாக்கப்படும் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில் பெங்களூரு – ஓசூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதற்காக பெங்களூரு நகரில் இருந்து ஓசூர் வரை ஆய்வு ரயில் இயக்கப்பட்டது. மதியம் 12 மணியளவில் ஓசூர் ரயில் நிலையம் வந்த இந்த ஆய்வு ரயிலில் தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் மற்றும் குழுவினர் வருகை தந்து ஓசூர் ரயில் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்பு செய்தியாளர்களிடம் ஏ.கே.ராய் கூறும்போது, ”பெங்களூரு – ஓசூர் இடையே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட பணி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஓசூர் – பெங்களூரு வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்குவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளும் நல்ல முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு ரயில்வே மூலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, விரைவில் ஓசூர் – பெங்களூரு இடையே மின்சார ரயில் இயக்கப்படும்.
தற்போதுள்ள கோவிட் – 19 உள்ளிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் மின்சார ரயில் இயக்கும் தேதி அறிவிக்கப்படும்” என்றார்.
இந்த ஆய்வுப் பணியின்போது பெங்களூரு மண்டல ரயில்வே மேலாளர் அசோக் வர்மா, ஓசூர் ரயில் நிலைய மேலாளர் குமாரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.