வங்கிகளின் “ நிதி நெருக்கடியை” சமாளிக்க வாடிக்கையாளர் டெபாசிட் தொகையில் கை வைப்பதா?: அருண்ஜேட்லிக்கு ஸ்டாலின் கடிதம்..


பெரும்பாலான சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள்போன்றவர்களின் உழைப்பினால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளவையாகும். வங்கிகளின் “ நிதி நெருக்கடியை” சமாளிக்க வாடிக்கையாளர் டெபாசிட் தொகையில் கை வைப்பதா? என நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

‘நிதித் தீர்வு மற்றும் வைப்புக்காப்பீடு வரைவு மசோதா – 2017’ பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ள பெரும் அதிர்ச்சியை தங்களுடைய மேலான கவனத்துக்கு கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தமசோதா தற்போது பாராளுமன்ற கூட்டுக் குழுவின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டு, அதன் முடிவுகள் எதிர்வரும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட இருக்கிறது என்ற செய்தி வங்கிகளுக்கும்-வாடிக்கையாளர்களுக்கு இடையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மசோதா பற்றி நாடு முழுவதும்உள்ள பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ள அச்சங்களை பாராளுமன்ற கூட்டுக் குழு நிச்சயம் கருத்தில்கொள்ளும் என்று நான் உறுதிபட நம்பினாலும், வங்கிகள் தேசியமயமாக்கலை திட்டவட்டமாக ஆதரித்த அரசியல் கட்சி என்ற முறையில், பொதுமக்கள் தங்களுடைய கடும் உழைப்பினால் சேமிக்கும் பணத்தை எந்தவொருவகையிலும், வங்கிகள் உள்ளிட்ட நிதி நிர்வாகங்களில் மேற்கொள்ளப்படும் மனித தவறுகளை சமன் செய்வதற்கு பயன்படுத்தப்படக் கூடாது என்றும், அவ்வாறு செய்வது மக்களின் நலனுக்கும், வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் விரோதமானது என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

திடீரென்று பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதன் விளைவாக வாடிக்கையாளர்களுக்கும்,வங்கிகளுக்கும் இடையிலான நம்பகத்தன்மை ஏற்கனவே சிதைந்து போய், அதை இன்னும் மீட்டு எடுக்க இயலவில்லை என்பதை சுட்டிக்காட்டுவது இந்ததருணத்தில் பொருத்தமானது என்றே கருதுகிறேன். தற்போது நிதி அமைச்சகம் கொண்டு வரும் புதிய மசோதா, வங்கிகளின் அடிப்படைக் கூறுகளை மாற்றி விடும் என்று நான் அஞ்சுகிறேன்.

வாடிக்கையாளர்கள் நலன்காப்பது வங்கிகளின் தலையாய கடமை என்பது நீர்த்துப்போக வைக்கப்பட்டு, வங்கிகள் மற்றும்வாடிக்கையாளர்களுக்கு இடையிலான உறவில் சரி செய்ய முடியாத அளவுக்கு விரிசலை ஏற்படுத்தி விடும் என்றுகருதுகிறேன். வங்கிகளை நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றவும், “தீர்ப்பாய கழகம்” அமைப்பதும், அந்தஆணையத்திற்கு அளவு கடந்த அதிகாரத்தை அளிப்பதும் வங்கிகள் மீதான “சந்தை நம்பிக்கையை” உற்பத்தி செய்யும் நோக்கமாக இருக்கலாம். ஆனால் வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக தட்டிப் பறித்துவிடும் ஆபத்து நிறைந்தது.

வரைவு மசோதாவின் 52-வது பிரிவில் (i)வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிறைவேற்ற வேண்டியபொறுப்புகளை ரத்து செய்வது (ii) பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாற்றங்கள் செய்வது (iii) ஒப்பந்தப்படி வங்கிகள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை ரத்து செய்வது (iv) வாடிக்கையாளரின் நிலைத்த வைப்பு போன்றவற்றின் காலக் கெடுவை தன்னிச்சையாக நீட்டிப்பது, மாற்றியமைப்பது (v) டெபாசிட் செய்துள்ளவர்களின் பணத்தை முதலீடாக எடுத்துக் கொள்வது போன்ற அதிகாரங்களை “தீர்ப்பாய கழகத்திற்கு” அளித்திருப்பது வங்கிகளின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு அதிகரிப்பதை விட, வங்கிகளில் போட்டுள்ள டெபாசிட்டுகள் திரும்பக் கிடைக்குமா எண்ற அவநம்பிக்கையை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும்.

வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949-ன்படி வங்கிகளின் நான்கு முக்கியப் பணிகளில்“வாடிக்கையாளர் கேட்கும் போது அவர்கள் டெபாசிட் செய்த பணத்தை வங்கிகள் திருப்பி கொடுப்பது” ஆகும். வங்கிகளின் இந்த அடிப்படை கொள்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த வரைவு மசோதாவை மக்கள் விரோத மசோதாகவே திமுக கருதுகிறது.

இன்று பெரும்பாலான சேமிப்பு வங்கிக் கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு நிதி கணக்குகள் மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள்போன்றவர்களின் உழைப்பினால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளவையாகும் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

ஆகவே, சேமிப்பு கணக்குகளில் உள்ள பணத்தையும், நிலைத்த வைப்புகள் முதிர்ச்சியடைந்த பிறகு திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பையும் வங்கிகளின் “ நிதி நெருக்கடியை” சமாளிப்பது என்ற அடிப்படையில் தட்டிக்கழிக்கும் வகையில் ஒரு மசோதாவை நிறைவேற்றுவதில் எவ்வித அடிப்படை நியாயமும் இல்லை. வங்கிகள் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பது ஒரு வாடிக்கையாளருக்கு உள்ள உரிமை.

அப்படியிருக்கும் போது “ தீர்ப்பாய கழகம்” உருவாக்குவதும், அதற்கு கட்டற்ற அதிகாரம் அளிப்பதும் வாடிக்கையாளர்களின் உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது. ஆகவே தாங்கள் இந்த மசோதாவை மீண்டும் ஒருமுறை திறந்த மனதுடன் பரிசீலனை செய்து, வாடிக்கையாளரின் நலனை மனதில் கொண்டு மறு வரைவு தயாரிக்க வேண்டுமெனவும், மசோதாவை முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் நலன் சார்ந்த மசோதாவாக ஆக்குவதற்கு தேவையான மாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

வங்கிகள் மேற்கொள்ளும் தவறான கடன் வழங்கும் நடவடிக்கைகளால் அவை நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ள நேரிடும் போது, அதை சமாளிக்க வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்துக் கொள்ளும்போக்கை தடுக்க வேண்டும் என்றும், கடின உழைப்பில் சேமித்த மக்களின் பணத்தை தவறான முடிவுகளை எடுக்கும்வங்கிகளை காப்பாற்றுவதற்காக தியாகம் செய்ய இயலாது என்றும் வலியுறுத்தி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் முறைப்படி கரம் கோர்த்த கோலி – அனுஷ்கா ஜோடி!

என் கணவர் நிரபராதி: தங்கல் நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் மனைவி புலம்பல்!

Recent Posts