முக்கிய செய்திகள்

இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்: பவா செல்லத்துரை

மழை பெய்துகொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், பிரபஞ்சனையே நிலைகொள்ளாமல் சுழன்றுகொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி. இப்படியான மழைநாளில் முழுவீடும் ஒழுகும். தன் வாழ்நாளெல்லாம் தேடித்தேடி சேகரித்த பல அரிய புத்தகங்கள் மழையில் நனையும். ஒழுகாத இடம் தேடி, படுக்கவும் இடமின்றி, ஒரு தமிழ் எழுத்தாளனின் பல ஆண்டு கால அலைச்சல் யாராலும் கண்டுகொள்ளப்படாமலேயே போகிறது. போகட்டும். இதனாலெல்லாம் துவண்டுபோகாத படைப்பு மனம் வாய்க்கப் பெற்ற படைப்பாளியாகத்தான் பிரபஞ்சனைப் பார்க்கிறேன்.

இருபதாண்டுகளுக்கு முன் புதுச்சேரியில் கி.ரா-வுக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, கையில் புகையும் ஒரு முழு சிகெரெட்டோடு முதன்முதலில் பிரபஞ்சனைப் பார்த்தேன். கொண்டாட்டங்களுக்காகப் பிறந்த கலைஞன் என அவரை எனக்குள் பதித்துக்கொண்டேன். ஆனால், பெரும் துக்கங்களை உள்ளடக்கிக்கொண்டு அப்படி வாழ ஆசைப்படும் எழுத்தாளன் என்பது அவரை ஆழ்ந்து படிப்பவர்களுக்கும், அவரின் நட்புக்கண்ணியின் ஏதோ ஒரு துளியில் ஒட்டிக்கொள்பவர்களுக்கும்கூடப் புரியும்.

ஆறேழு மாதங்களுக்கு முன் அவர் ஒரு இலக்கிய நிகழ்வுக்காக கனடா சென்றிருந்தபோது அவர் மனைவி இறந்துவிட்டார். பதறி அடித்து புதுச்சேரிக்குப் போனால், அதே தூய்மையான வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையுமாக எங்களை எதிர்கொள்கிறார். அப்பிரிவின் துயரை அவர் அன்று ஆற்றிக்கொண்ட விதம் வேறெந்த மரணத்திலும் நான் காணாதது. அதீத துக்கமும், சந்தோஷமும் மனப்பிறழ்வைச் சமீபிக்குமோ என பயத்தில் உறைந்த தருணமது. பிரபஞ்சன் ஒரு நண்பரின் கைப்பிடித்துச் சொல்கிறார்: “ராணிக்கு ஒரு நல்ல கணவன் வாய்த்திருந்தால் அவள் நன்றாக வாழ்ந்திருப்பாள். அவள் வாழ்நாளெல்லாம் இக்குடும்பத்தைக் காத்துக்கொள்ள ஓடிக்கொண்டேயிருந்தாள். நான் ஒருபோதும் அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருந்ததில்லை.”

இப்பூமிப் பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லௌகீக வாழ்வின் முன்பு இப்படித்தான் உள்ளடங்கிப் போய்விடுகிறது. மூன்றாம்தர மனிதர்களின் வெற்றிப் பெருமிதத்துக்கு முன் ஒரு படைப்பாளி ஒடுங்கிப்போவது இந்தப் புள்ளியில்தான். ஆனால், பிரபஞ்சன் உன்னதமான உயரிய படைப்பின் மூலம் இத்தாக்குதலைத் தன் காலில் போட்டு நசுக்குகிறார். லௌகீக வாழ்வின் தோல்வியை, மானுட வாழ்வுக்கான தன் ஆகச் சிறந்த படைப்புகளின் மூலம் இட்டு நிரப்பி விஸ்வரூபமெடுக்கிறார்.

ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் ஒரு தொடர்கதை எழுத ஒப்புக்கொண்டு ஏழெட்டு வாரங்கள் எழுதி முடிக்கிறார். அச்சு இயந்திரத்தின் அகோரப்பசிக்கு இவரால் தீனி போட முடியவில்லை. அது அவரையே கேட்கிறது. படைப்புக்கும், அச்சேற்றத்துக்குமான இடைவெளியை ஒரு எழுத்தாளன் நிதானமாகத்தான் கடக்க வேண்டியுள்ளது. இட்டு நிரப்புவது அல்ல எழுத்து. இந்தப் பெரும் மனப்போராட்டத்துடனேயே, அவர் அக்கதையின் நாயகி சுமதியை அண்ணா சாலையில் நிறுத்திவைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறி வந்துவிட்டார்.

எத்தனையோ அற்புதமான இரவுகளைப் போல அவர் தன் கதாநாயகியை அம்போவென விட்டுவிட்டு வந்து எங்களோடு கொண்டாடிய அந்த இரவும் மறக்க முடியாதது. சலிப்படையாத உரையாடல் அவருடையது. சங்க இலக்கிய வாசிப்பும், கற்றுத் தேர்ந்த அம்மரபைத் தொடர்ந்து மீறுவதும், நவீன வாசிப்பைத் தன் மூச்சுக் காற்றைப் போல தனக்குள்ளேயே வைத்திருப்பதும் அவரை ஒரு காட்டாற்று வெள்ளமாகவே வைத்திருக்கிறது.

ஒரே மனிதன் ஒட்டுமொத்த மானுடப் பசிக்கான துயரத்தைப் பாடிக்கொண்டே தன் சொந்தப் பசிக்காகவும் ரொட்டிகளைத் தேட வேண்டியிருப்பது கொடுமை. தமிழில் பல எழுத்தாளர்களின் நிலை அதுதான்.  பிரபஞ்சனுக்கும் அதுதான் நேர்ந்தது. ஆனால், அதையும் தாண்டி தன் ஒட்டுமொத்த படைப்புகளில் அவர் மனிதகுலத்தை ஒரு அடி முன்னே நகர்த்தவும், சக மனிதர்கள் மீது அன்பு செலுத்தவும் அவர் முயன்றுகொண்டேயிருந்தார்.

தன் குடும்பச் சிதைவை ‘மகாநதி’ என்கிற உயிருள்ள ஒரு நாவல் மூலம் தன் வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டார். கள்ளுக்கடைகள் இழந்து, சாக்னா ஸ்டால்கள் இழந்து, வீடு இழந்து, அந்த ஆலமரம் வேரோடு சரியும்போதும் அதன் கம்பீரம் குலையாமல், தன் வேரில் கோடாரியோடு மல்லுக்கட்டுபவன் மீதும் விழும் ஆலமர நிழல் மாதிரியானது பிரபஞ்சனின் வாழ்வும் படைப்பும்.

நன்றி: இந்து தமிழ் திசை