மாறி வருகிற வாழ்க்கைச் சூழலில் நோய்களும் அதிகரித்து வருகின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. பக்கவாதம் அப்படியான ஒரு பிரச்சனை.
மூளை இரத்த நாளங்களில் ஏற்படுகிற அடைப்பு அல்லது இரத்த கசிவினால் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. இதில் முதல் வகை பக்கவாதம் (இஸ்கிமிக் பக்கவாதம்) ஏற்பட்ட முதல் 4.5 மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால் குணமாக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். அதற்கு செய்யப்படும் இரத்த உறைவு (த்ரோம்போலிசிஸ்) சிகிச்சையை இதுவரை 159 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பரிசோதித்து அவர்களைக் குணமாக்கியுள்ளது காரைக்குடி – மானகிரி அப்பல்லோ ரீச் மருத்துவமனை.
பக்கவாத சிகிச்சை விழிப்புணர்வு குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர். திருப்பதி சங்கரலிங்கம், “பக்கவாதத்திற்கான அறிகுறிகள் தென்பட்ட 4.5 மணிநேரத்திற்குள் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் அவர்களுக்கு பக்கவாதம் உறுதி செய்யப்பட்டால் டெனக்டிஸ் என்ற மருந்து பயன்படுத்தி த்ரோம்போலிசிஸ் சிகிச்சை செய்ய முடியும். 93 சதவீத நோயாளிகளுக்கு வெற்றிகரமாக இதனை செய்ய முடிந்திருக்கிறது.
50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் பக்கவாதம் ஏற்பட்ட 3 மணி நேரத்துக்குள் கொண்டு வரப்பட்டார். கடுமையான மூளை பக்கவாதமாக இருந்த போதும் நான்கு நாட்கள், 15 நாட்கள், ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது.
இதே போல் 88 வயது மூதாட்டி ஒருவருக்கு இந்தச் சிகிச்சை செய்திருக்கிறோம். அடுத்தடுத்து மூன்று முறை அவருக்கு பக்கவாதம் வந்த போதும் இந்த சிகிச்சை பலன் அளித்தது.
பொதுமக்கள் மட்டுமன்றி மருத்துவர்களுக்குமே போதிய விழிப்புணர்வு இல்லை. நியூரோ மருத்துவர் தான் இதனை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. பொது மருத்துவரால் கூட இந்தச் சிகிச்சை அளிக்க முடியும்.
159 என்பது காரைக்குடியைச் சுற்றி மானகிரி போன்ற கிராமப்புற மருத்துவமனை ஒன்றில் மிக அதிக எண்ணிக்கை. அப்பல்லோ ரீச் மருத்துவமனையின் அவசர சிகிச்சை குழு, பணியாளர்கள் ஆகியோரால் தான் இது சாத்தியமானது” என்றார்.
சரியான நேரத்தில் அளிக்கப்படுகிற சிகிச்சை உயிரையே காப்பாற்றும் என்பதற்கு இவர்களின் பணி உதாரணம். இன்றைக்கு மருத்துவ அறிவியல் வெகுவாக வளர்ந்திருக்கிறது. நாம் பயன்படுத்திக் கொள்ளும் முறையில் தான் அதன் அருமைகளை உணர முடிகிறது.
நவீன இந்தியாவில் நோயுற்ற தன்மை அதிகரிப்பதற்கும் அதனால் இறப்பு ஏற்படுவதற்கும் பக்கவாதமும் ஒரு முதன்மை காரணியாக உள்ளது. கிட்டதட்ட ஒரு இலட்சத்துக்கு 145 பேர். மாறி வருகிற வாழ்க்கை சூழல், சமூக அமைப்பு, உடல்சார் செயல்பாடுகள் இல்லாதது, புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் மேற்கத்திய மோகம் ஆகியவை பெருமளவில் பக்கவாதத்தை உண்டாக்கவும் அதிகரிக்கச் செய்கிறது.
பக்கவாதத்திற்கான த்ரோம்போலிசிஸ் சிகிச்சை, நகர்ப்புற/கிராமங்களில் குறைவாகவே அளிக்கப்பட்டிருக்கிறது (நகரமில்லாத பகுதிகளில் 3 சதவீதத்திற்கும் குறைவு. நகரங்களில் 10 சதவீதம்) இதற்கு பலவித காரணங்கள் உண்டு. நியூராலஜி சிறப்பு நிபுணர்கள் இங்கு குறைவாக இருப்பதும் சிகிச்சையில் ஏற்படும் இரத்தக்கசிவு சிக்கல்கள் மீதான பயமும் அதன் விளைவுகளும் இந்தச் சிகிச்சை முறை அதிகளவில் மேற்கொள்ளப்படாததற்கான காரணங்கள். மாரடைப்பிற்கான த்ரோம்போலிசிஸ் சிகிச்சையின் போது உண்டாகுற சிக்கல்கள் அளவுக்கே பக்கவாதத்திற்கான சிகிச்சையின் போதும் ஏற்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
காரைக்குடி அப்பல்லோ ரீச் மருத்துவமனை – இதுவரை 159 கடுமையான மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்த உறைவு (த்ரோம்போலிசிஸ்) சிகிச்சை அளித்து அவர்களை நலமாக்கி உள்ளது. இந்தியாவில் பொது மருத்துவரால் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம்.
இந்த சிகிச்சை முறையின் முக்கியத்துவத்தையும் ஆரம்ப கால பக்கவாதத்திற்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சை மிகவும் உதவக்கூடியதாக இருப்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறோம். பாதுகாப்பாக இந்த சிகிச்சையை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆய்வு SITS -MOST அறிக்கை சுட்டிக்காட்டும் அறிதல்களையும் முடிவுகளையும் உறுதி செய்யும் வகையில் நமது மருத்துவமனையின் பதிவுகள் அமைந்திருக்கின்றன.
எங்களின் அனுபவத்தில் 159 நோயாளிகளில் மூன்று பேருக்கு கடுமையான ரத்தக்கசிவு உண்டானது. ரத்தக்கசிவினால் ஏற்படும் இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கு சற்று கூடுதல். நோயாளிகள் தங்களின் தசை ஆற்றல், எதிர்புவியீர்ப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை மீளப் பெறவும் படுக்கையில் இருக்க வேண்டிய அவசியமற்றும் தங்களின் அன்றாட செயல்பாடுகளுக்காக மற்றவர்களை குறைவாகச் சார்ந்தும், முழுமையான சுய ஆற்றலுடனும் சிகிச்சைக்கு பிறகு இருக்க முடிந்திருக்கிறது. கடுமையான மூளை பக்கவாதத்தில் இறப்பு விகிதம் (4% மட்டுமே) குறிப்பிடும்படியாக குறைந்திருப்பதோடு பக்கவாதத்தின் பின்விளைவுகளும் வெகுவாக குறைந்திருப்பதைக் காண முடிந்தது.
பக்கவாதம் ஏற்பட்ட 4.5 மணிநேரத்திற்குள் கொண்டு வரப்படுகிற, கடுமையான மூளை பக்கவாத நோயாளிகளுக்கு மட்டுமே இந்த த்ரோம்போலிசிஸ் சிகிச்சை அளிக்க முடியும். ஏப்ரல் 2012 முதல் இப்போது வரையில் 159 நோயாளிகளுக்கு அல்டிபிளாஸ்/டெனக்டாஸ் உடனான த்ரோம்போளிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளின் சராசரி வயது 65. இவர்களில் குறைந்தபட்சமாக 29 வயது இளைஞரும் அதிகபட்சமாக 85 வயது முதியவரும் அடக்கம். மூன்றில் இரண்டு பங்கினர் ஆண்கள்.
மருத்துவமனையின் அமைவிடத்திற்கேற்ப சிகிச்சை பெற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள். பொதுவான அபாய காரணிகளான உயரத்த அழுத்தம், இதய தமனி நோய், நீரிழிவு நோய் ஆகியவை 60% நோயாளிகளுக்கு இருந்தது. பக்கவாதம் ஏற்பட்டதிலிருந்து மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு வந்த நேரம் சராசரியாக 2 மணி நேரமாகவும் குறைந்தபட்சம் 15 நிமிடத்தில் இருந்து அதிகபட்சம் 4.5 மணி நேரமாகவும் இருந்திருக்கிது. பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வலது பக்கவாதமும் (கால் மற்றும் முகம்) பகுதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பேச்சு திணறலும் இருந்தது.
கிட்டத்தட்ட 95 சதவீத நோயாளிகள் மீட்கப்பட்டிருக்கின்றனர் 93 சதவீத நோயாளிகளுக்கு குறிப்பிட தகுந்த நரம்பியல் மீட்சியும் எதிர்ப்புவி ஈர்ப்பு செயல்பாடுகளட்டும் திரும்பி உள்ளனர். சராசரியாக ஐந்தில் நான்கு பேர் பேச்சு திணறலில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இந்தச் சிகிச்சை பொது மருத்துவரான டாக்டர் திருப்பதி சங்கரலிங்கம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
கடுமையான மூளை பக்கவாதத்திற்கு ஆரம்ப கட்ட த்ரோம்போலிஸ் சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானது. நகர்ப்புறங்களில் அல்லது சிறிய அளவிலான மருத்துவ இடங்களில் கூட, குறிப்பாக பக்கவாதம் ஏற்பட்ட முதல் 4.5 மணி நேரத்திற்குள் இந்த சிகிச்சை செய்யப்படும் போது சிறப்பான முடிவுகள் கிடைப்பதோடு நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதமும் குறைகிறது. நரம்பியல் சிறப்பு நிபுணருக்காக காத்திருப்பது சிகிச்சையை தாமதப்படுத்துவதுடன் நோயாளியின் நிலையை மோசமாக்கும். இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மருத்துவ நிலையங்களில், குறைவான அல்லது முன் அனுபவம் ஏதுமற்ற நிலையிலும், பக்கவாதத்திற்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சையை அதிகளவில் மேற்கொள்ள நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது மருத்துவமனை நிர்வாகி திருமதி. லாவண்யா அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களையும் வரவேற்று அவர்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மருத்துவ நிர்வாகி டாக்டர் கோகுல் உடனிருந்தார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்