வங்க கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : இன்று முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் (திங்கள்கிழமை) இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 27, 28 மற்றும் 29 தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, பூமத்திய ரேகையையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நிலவுகிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவ.25) தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது அதற்கடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் சில இடங்களிலும், வரும் 26, 27, 28-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், வரும் 29, 30-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (திங்கள்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வரும் 27-ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 28-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், வரும் 29-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., நாகப்பட்டினம், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நா.த.க.விலிருந்து கோவை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்..,

வங்கக் கடலில் இன்று உருவாகும் புயல் நவ.30-ம் தேதி சென்னை- பரங்கிப்பேட்டை இடையே கரையைக் கடக்கும் என கணிப்பு..

Recent Posts