முக்கிய செய்திகள்

`புதிய அரசியல் கட்சி தொடங்கிய கமலுக்கு பாரதிராஜா வாழ்த்து…


அரசியல் பயணத்தைத் தொடங்கி, புதிய அரசியல் கட்சியை அறிவித்துள்ள கமல்ஹாசனுக்கு இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்காலமின் இல்லத்திலிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், மதுரை ஒத்தக்கடையில் நேற்று (21.2.2018) நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இருப்பதாக அறிவித்தார். கமலின் அரசியல் பயணத்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

 

அந்தக் கடிதத்தில், “அறிவாளியாய் இருப்பதைவிட புத்திசாலியாக இருக்கிறவன்தான் ஜெயிக்கிறான் என்ற தத்துவம் வாழ்க்கைக்கு மட்டுமல்ல. அரசியலுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ்நாடு இன்று சாதி, மதம், இனம் என்ற வேற்றுமைகளால் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. இவை அத்தனையும் ஒரே அணியில் கூட்டிச் சேர்ப்பது பெரும்பாடு.

கரைவேட்டி கட்டி கட்சிக் கொடி பிடித்து, மேடை போட்டு மைக் பிடித்துப் பேசுவது மட்டும்தான் மக்களுக்கான அரசியல் பிரசாரம் அல்ல!. திரைப்படத்தின் மூலமும் சமூக, அரசியல் கருத்துகளைச் சொல்லலாம். `என் திரைப்படங்களைச் சென்சார் செய்யாமல் திரையிட அனுமதித்தால் ஒரே ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியமைக்கிறேன்’ என்றாராம் அறிஞர் அண்ணா.
கமல்ஹாசனும் தனது திரைப்படங்கள் மூலம் சமூகக் கருத்துகளை மக்களிடம் விதைத்தவர்தான். தன் நற்பணி மன்றத்தின் மூலம் மக்கள் பணியாற்றியவர்தான்.

 

ரத்ததானத்திலிருந்து, தன் உடலையே தானம் செய்தவர் கமல். அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு இதுபோன்ற நற்பணிகளைச் செய்தவர் அல்ல. உண்மையான தொண்டுள்ளம் கொண்ட காரணத்தால்தான் செய்தார். ஒரு தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்.

இன்று அரசியல், தமிழர்களின் வரலாறு, கலாசாரம், பண்பாடு, போராட்டம் ஆகிவற்றோடு பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்கள் புரட்சியால் மட்டும்தான் மாற்றம் கொண்டுவர முடியும். உங்கள் `மக்கள் நீதி மய்யத்தின்’ பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். `செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன்தான் போதிக்கிறான்’ என்று சொல்வார் பெர்னாட்ஷா. கமல் நீங்கள் செய்ய முடிந்தவர். திரையில் தெரிந்த உங்களின் தசாவதாரம், அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.