பீமா கோரேகான் கலவரம் எதிரொலி: இணையதள சேவை துண்டிப்பு..


மகாராஷ்டிரா மாநிலம், பீமா கோரேகானில் தலித் மக்களுக்கும், இந்துத்துவா அமைப்புகளுக்கும் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, அங்கு இணையதளம் மற்றும் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்பு, மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் போர் நடந்தது. மராட்டிய அரசர் பேஷ்வாவுக்கு எதிரான இந்த போரில் ஏராளமான ஒடுக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்த போரில் பேஷ்வா தோல்வியடைந்தாலும் ஏராளமான மஹர் இன மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு நினைவு செலுத்தும் வகையில் பீமா கோரேகானில் வெற்றித் தூண் நிறுவப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் போரின் 200ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏராளமான தலித் இன மக்கள் நினைவிடத்தில் குவிந்தனர். ஆனால் இந்துத்துவா அமைப்புகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். தலித் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் ஃபதன்கலே (28) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் ஏராளமான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. வன்முறையை அடுத்து மும்பை முழுவதும் சாலைமறியல் மற்றும் போக்குவரத்து மறியல் நடைபெற்றது.

கலவரம் முற்றியதைத் தொடர்ந்து, நேற்று மும்பை முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் மும்பையில் தலித் மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்த பல சமூக இயக்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் முழுவதும் இணையதளம் மற்றும் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது