பாரத் பந்த் எதிரொலி: 100க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிப்பு..

எஸ்சி,எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தலித் அமைப்புகள் வடமாநிலங்களில் பாரத் பந்த் நடத்தின. இந்த பந்த்தால், 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன, பல ரயில்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.

எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் புகார் அளித்தால் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது, தீவிர விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்களை மேல் அதிகாரிகளின் உரிய அனுமதி பெற்றபின்பு தான்கைது செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு எஸ்சிஎஸ்டி மக்களுக்கு விரோதமானது, அவர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்காலத்தில் அதிகரிக்கச்செய்யும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறப்பு உரிமைகளை நீர்த்துப் போகச்செய்யும் விதமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளும், தலித் அமைப்புகளும் குற்றம் சாட்டின.

இந்நிலையில், வடமாநிலங்களில் பாரத்பந்த் நடத்த இன்று தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி நடந்த பாரத் பந்த்தில் மத்தியப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெரியஅளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. மத்தியப் பிரதேசத்தில் நட்த வன்முறையில் 5 பேர் பலியானார்கள்.

சாலை மறியல்களும், ரயில் மறியல்களும் நடந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இந்த பந்த் காரணமாக ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

இது குறித்து வடக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் நிதின் சவுத்ரி கூறுகையில், ‘பாரத் பந்த் காரணமாக 100-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை இன்று பாதிக்கப்பட்டன. குறிப்பாக டெல்லி அமிர்தசரஸ் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் அம்பாலாவுடன் நிறுத்தப்பட்டது. மேலும், பெரோஸ்பூர், ஹப்பூர், மொராதாபாத், காஜியாபாத் ஆகிய நகரங்களி்ல ரயில்வே சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதத்தை ஏற்படுத்தினார்கள்.

ராஜஸ்தான், பிஹார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஹரியானா, டெல்லி ஆகியமாநிலங்களில் பல நகரங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால், சப்தகிராந்தி எக்ஸ்பிரஸ், உத்கல் எக்ஸ்பிரஸ், காதிமான் எக்ஸ்பிரஸ் , புவனேஷ்வர், ராஞ்சி ராஜ்தானி,கான்பூர் சதாப்தி ஆகிய ரயில்கள் சேவை பாதியிலேயே நிறுத்தப்பட்டன.

ஆக்ரா மண்டலத்தில் மட்டும் 28 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டன. கிழக்கு மத்திய ரயில்வேயில் 43 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டன. வடகிழக்கு ரெயில்வே, தென்கிழக்கு ரயில்வே ஆகியவற்றில் 18 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.