பீகாரில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகாரில் பூரணமதுவிலக்கு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்துவரும் நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த இரண்டு தினங்களில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். ஆனால் இந்த உயிர் இழப்புகள் கள்ளச்சாராயம் அருந்தியதால்தான் ஏற்பட்டது என்பதை மாவட்ட நிர்வாகங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
கடந்த பத்து தினங்களில் பீகார் மாநிலத்தின் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய கள்ளச்சாராய சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுவிலக்கு என்ற போர்வையை விரித்துள்ள பீகார் அரசு, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 70 பேர் உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.