வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
திருச்சியில் பாஜக கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “அமமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. பாஜக சார்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் டெல்லி பிரதிநிதி கிஷன் ரெட்டியும் என்னிடம் இன்று தொலைபேசியில் பேசினார்கள். அவர்களிடம் பாஜக கூட்டணிக்கு அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்தேன். கடந்த மூன்று மாதங்களாகவே பாஜக தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். இன்று அதிகாரபூர்வமாக பேசினோம்.
அமமுகவின் கோரிக்கைகளை ஏற்கெனவே கடிதம் மூலமாக பாஜகவிடம் கொடுத்துவிட்டோம். பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும். மோடியே மீண்டும் ஆட்சியமைப்பார். பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளோம். கடந்த 6 மாதங்களாக எங்களிடம் பாஜக பேசிக்கொண்டிருக்கிறது. அதில் கடந்த மூன்று மாதங்களாக கூட்டணி குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருந்தோம்.
எங்களின் தேவை என்னவென்பது பாஜகவுக்கு தெரியும். உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். எந்தவித நிர்பந்தமும் எங்களுக்கு கிடையாது. தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என பாஜக நிர்பந்திக்கவில்லை. எங்களுக்கென தனிச் சின்னம் உள்ளது.
தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தும் நிலை நீடித்தால், பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று தான் கூறினேன். தற்போது தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டங்களையும் பாஜக அமல்படுத்தவில்லை. வருங்காலத்தில் தமிழகம் முன்னேறுவதற்கு உதவுவதாக பிரதமர் மோடி உத்தரவாதம் கொடுத்துள்ளார். எனவே, எந்தவித உறுத்தலும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறோம்.
1999 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி போக மாட்டோம் என்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரே, 2004 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். அவரை போலவே, இந்தக் காலகட்டத்தில் தமிழகத்துக்கு என்ன தேவையோ அந்த அடிப்படையில் அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலின் போது என்னை சரியாக புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். அதனால் என்னை பாஜக எதிர்த்தது. தற்போது என்னைப் பற்றி புரிந்துகொண்டிருக்கலாம். 2021 தேர்தலிலேயே பாஜக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு இருந்தது. அது சரிவரவில்லை என்பதால் அப்போது தனித்து நின்றோம்.
தற்போது பாஜக எங்களுடன் நட்பு பாராட்டி வருகிறது. வருங்காலத்தில் நாங்களும் அவர்களுடன் நட்புடன் பயணிக்க விரும்புகிறோம். அதனால் கூட்டணி அமைத்துள்ளோம். பாஜக இந்தியாவின் வளர்ச்சிக்கான இயக்கம். அவர்களின் கொள்கைகளில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த காலகட்டத்தில் தேவையான ஓர் கட்சி பாஜக என்பதே என்னுடைய நிலைப்பாடு. நான் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை.