முக்கிய செய்திகள்

ராகுலை வம்பில் மாட்டிவிடும் விஜய் மல்லையா: பாஜக எழுப்பும் பரபர சர்ச்சை!

வங்கிக் கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவை ரீட் வீட்செய்திருப்பது குறித்து பாஜக கேள்வி எழுப்பி இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமரின் கருப்புப் பண மீட்பு  தொடர்பான வாக்குறுதிகளை விமர்சித்து தமது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.

ராகுல் பதிவிட்டிருந்த கருத்து:

பிரதமர் மோடி 2014ல் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள அனைத்து கருப்புப் பணத்தையும் மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வோர் இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல் படுத்தி, 2018ல் இந்தியாவில் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்தார். தற்போது, சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணமுதலீடு 50 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், ஆனால் அது கருப்புப் பணமில்லை என்றும் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த ட்விட்டர் கருத்தை விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் ரீடிவிட் செய்து பகிர்ந்ததுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர்           அனில் பலூனி, விஜய் மல்லையா காங்கிரசுடன் எப்போதுமே நல்லுறவு கொண்டிருப்பவர் என்பதையே இது காட்டுவதாக கூறியுள்ளார். இதேபோல் இந்த விவகாரம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருக்கும் பாஜகவைச் சேர்ந்த சம்பித் பாத்ரா, பிரதமர் மோடியை விமர்சித்து ராகுல் இட்ட பதிவை , விஜய் மல்லையா பகிர்ந்ததேன் என வினவியுள்ளார். இதற்கு ராகுல்காந்தி பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். விஜய் மல்லையாவின் விஷமத்தனமான நடவடிக்கை, காங்கிரசுக்கும், ராகுலுக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் விஜய் மல்லையா 9000 கோடி வங்கிக் கடனை வாங்கி மோசடி செய்திருப்பதாக பாஜக கூறிவரும் நிலையில், மல்லையாவின் இந்த நவடிக்கை காங்கிரசுக்கு மேலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.  

BJP Attack congress for Vijay Mallya retweets Rahul Gandhi’s post