பீகாரில் கட்சியை நிதிஷூக்கு வாங்கிக் கொடுத்தது பாஜக… தமிழகத்தில் என்ன நடக்கப் போகுதோ!

பீகாரில் ஒரு வழியாக ஐக்கிய ஜனதா தளத்தையும், அதன் சின்னத்தையும், பாஜக நிதிஷ்குமாருக்கு வாங்கிக் கொடுத்துவிட்ட நிலையில், தமிழகத்தில் அதே நிலையில் இருக்கும் அதிமுக விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது என்பதுதான் தற்போதைய பக்… பக்…

பீகாரி்ல், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியமைத்த நிதிஷ்குமார், திடீரென மோடி பக்தராகி, பாஜகவுக்கு விலைபோய் விட்டார். லாலு, காங்கிரசைக் கழற்றி விட்டுவிட்டு, பாஜகவுடன் கை கோர்த்து ஆட்சியையும் அமைத்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உருவாக்கிய நிறுவனர் சரத்யாதவ் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து, தேர்தல் ஆணையத்தில் கட்சியும், சின்னமும் தமக்கே சொந்தமென முறையிட்டார். நிதிஷ்குமாரும் பதிலுக்கு முறையிட்டார். மத்திய அரசின் நல்லாசியுடன் தற்போது கட்சியையும், சின்னத்தையும் நிதிஷ்குமார் கபளீகரம் செய்துவிட்டார். தமிழகத்திலும் ஏறத்தாழ அதிமுகவின் நிலை இதுதான். முதலில் பிரிந்திருந்த ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினர் இப்போது சேர்ந்து விட்டனர். தற்போது தினகரன் தரப்புக்கும் ஆளும் தரப்புக்கும் கட்சியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் சசிகலா உறவினர் வீடுகளில் சோதனை நடந்தது. உச்சக்கட்டமாக ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்திலும் சோதனை நடத்தப்பட்டாகிவிட்டது. அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை உணர முடிகிறது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்த வேண்டியதுதானே என்பது அவர்களது கேள்வி. பாஜகவிடம் இதற்கு பதிலில்லை. காரணம், தமிழகத்தில் எப்படியாவது தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற குறுக்கு வழி முயற்சிகளில் ஒன்றுதான்  இந்த வருமானவரி சோதனை. அடுத்தது அதிமுகவும், இரட்டை இலைச் சின்னமும் யாருக்கு என்ற பிரச்சனை. பீகாரில், நிதீஷ் குமார் மோடிக்கு நிபந்தனையற்ற அடிமையாக சம்மதம் தெரிவித்து விட்டதால், ஐக்கிய ஜனதா தளம் என்ற பெயரையேனும் நிதிஷ்குமாரிடம் விட்டு வைத்துள்ளது. தமிழகத்தில் தனக்கு சரியான விசுவாசிகள் யார் என்பதை பாஜகவால் இதுவரை உறுதி செய்து கொள்ள முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பார்த்தது. அவருக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை என்று தெரிந்ததும், ஆதரித்த பாவத்திற்கு துணை முதலமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்து ஓரம்கட்டி விட்டது. பழனிசாமி தான் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்க தமிழக நலன் அனைத்தையும் ஏலம் போடாத குறையாக மத்திய அரசிடம் குத்தகை விலைக்கே விற்றுவிட்டார். அப்படியும் பாஜக அவரை முழுமையாக நம்பத் தயாராக இல்லை. ஜெயலலிதாவுக்கு காட்டும் விசுவாசத்தைத் தானே அவர் மற்றவர்களுக்கும் காட்டுவார் என்பது பாஜகவின் பம்மல் கணக்கு. ஆக, அதிமுகவையும், இரட்டை இலைச் சின்னத்தையும் யாருக்காவது பாஜக வாங்கிக் கொடுக்குமா, அல்லது ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டிவிடுவார்களா என்பதுதான் இப்போதைய கேள்வி. இந்தத் தேர்தல் ஆணையமெல்லாம் ஆளும் அரசை தாண்டி எதையும் செய்யாது.. தன்னதிகாரம் என்பதெல்லாம் சும்மா ஒரு சொல்லலங்காரத்திற்குத்தான்!

BJP finish the Bihar… What about Tamilnadu?