பா.ஜ.க அரசின் ஆணவப்போக்கால் நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடும் சூழல் உருவானது”
– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு கட்டுபடியாகக்கூடிய நியாமான விலை உள்ளிட்ட எந்த கோரிக்கையையும் முறையாகப் பரிசீலனை செய்து பிடிவாதமாக நிறைவேற்ற மறுத்து,
பல முறை நடைபெற்ற அறவழி அமைதிப் போராட்டங்களையும் துளியும் மதிக்காமல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் திரு நரேந்திர மோடியும் இந்த நான்கரை ஆண்டு காலமாக பாராமுகமாக நடந்து அலட்சியப் படுத்திக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் இன்றைக்கு தலைநகர் டெல்லியில் கூடி போராட்டங்களையும்,
மாபெரும் பேரணியையும் நடத்தியிருப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவப் போக்குதான் முழுமுதற் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
விவசாயிகளின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் மத்திய – மாநில அரசுகளின் போக்கு கண்டத்திற்குரியது என்கிற போதிலும், விவசாயிகள் தங்கள் அறவழிப் போராட்டங்களை அமைதியாகவும், நாகரீகமாகவும்,
நமது பண்பாட்டுக்கு எவ்விதக் குறைவும் ஏற்பட்டு விடாமலும் நடத்திட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.
தமிழ்நாட்டின் பாரம்பரிய சீர்மிகு பண்புகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், தமிழக மக்களே முகம் சுழிக்கும் வகையிலும் நடைபெறும் நிர்வாணப் போராட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவோ ஆதரிக்கவோ இயலாது.
இத்தகைய போராட்டமுறைகள், போராட்டத்தின் மைய நோக்கத்தை திசைதிருப்புவதாக அமைந்துவிடும் என்பதைச் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஆகவே, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு அய்யாக்கண்ணு அவர்கள் இதுபோன்ற நிர்வாணப் போராட்டங்களை தயவு செய்து கைவிட்டு,
தமிழகத்தின் மாண்பையும், மதிப்பையும் மேலும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் ஜனநாயக ரீதியிலான, நாகரீகமான அறவழி அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டு
விவசாயிகளின் ஒட்டுமொத்த வேதனைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.