பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: டிடிவி தினகரன் …


வடகிழக்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெறலாம். ஆனால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்று ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருவண்ணா மலையில் நேற்று மாலை அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ரூ.10 ஆயிரம் கோடி வைத்துள்ளீர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்த கேள்விக்கு, ‘அவரிடம்தான் பணத்தைக் கொடுத்து வைத்துள்ளேன். அந்தப் பணத்தைத் தர மாட்டேன் என்கிறார்’ என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணி குறித்து பின்னர் பார்க்கலாம். எங்கள் அணியில் உள்ள 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான தீர்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சடுகுடு ஆட்டம் ஆடுகின்றனர். ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் கூறாமல், அவன், இவன் என்று ஒருமையில் முதல்வர் பேசியது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல” என்றார்.

பின்னர் அவர், சசிகலா குடும்பத்தினர் சந்தர்ப்பவாதிகள் என்று நடிகர் கமலஹாசனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ‘கமல் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாது. அவருக்கு மக்கள் பதில் சொல்வார்கள்’ என்றார்.

வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெறலாம். தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. எனது அணியில் உள்ள 18 சட்டப் பேரவை உறுப்பினர்களும், முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் கூறினர்.

ஆனால் நான், இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிறேன். அந்த அளவுக்கு ஆட்சியை நடத்தி வருகின்றனர் ” என்றார்.