முக்கிய செய்திகள்

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராய உயிரிழப்புகள்: பிரியங்கா..

பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளாச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

”உத்தரப் பிரதேசம் மற்றம் உத்தரகாண்ட் மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் கூடும் என்று தெரிகிறது.

இரண்டு மாநிலங்களிலும் சட்டவிரோத மதுபானத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மாநில அரசுகளின் ஆதரவு இல்லாமல் இந்தத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன என்பதை நம்ப இயலாது.

இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். அதே நேரம் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்”.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளதாகவும் 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை உயரதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.

இதில், உத்தரகாண்டில் பாலுப்பூர் கிராமத்தில் நடந்த இறப்புச் சடங்கு ஒன்றில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட மதுபானத்தை அருந்தியவர்கள் உயிரிழந்தனர்.