இமாசலப் பிரதேசத்தில் ஆட்சி கிடைத்தது… முதல்வர் பறிபோனார்!

இமாச்சல பிரதேசத்தில் இந்த முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் தோல்வியடைந்துள்ளார். இதனால் முதலமைச்சருக்கு புதிய ஆளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. அது மட்டுமின்றி வெற்றி பெற்றும் அதை வெளிப்படையாக கொண்டாட முடியாத வகையில், முதலமைச்சர் வேட்பாளரே தோற்றுவிட்டார்.

இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் 1990களுக்கு பிறகு, காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. 2012-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்தது. முதல்வராக மூத்த தலைவர் வீர் பத்திர சிங் பதவியேற்றார்.

அங்கு, 5 ஆண்டுகால ஆட்சியில் மிக மோசமான நிதி நிலைமையும், ஊழல் குற்றச்சாட்டுகளும் காங்கிரஸுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தின. கடந்த ஆறு மாதமாகவே மாநில அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி பாஜக போராட்டம் நடத்தி வந்தது.

இந்த நிலையில், .இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. முதல்வர் வீர்பத்ர சிங், முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் உட்பட முக்கிய பிரபலங்கள் மீண்டும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின. காங்கிரஸும் பாஜக.வும் 68 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்தமுறை ஆட்சியை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றிய பாஜக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.

அதேசமயம் காங்கிரஸுக்காக, ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரம் செய்தார். ஆனால் மாநிலத்தில் நிலவிய ஊழல் மற்றும் ஆளும் அரசு மீதான அதிருப்தி காரணமாக இந்த முறை மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என தொடக்க நிலையில் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதேபோல் தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு கணிப்பிலும் பாஜகவே வெற்றி பெறும் என தெரிவித்தன. இதனால் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே எழுந்தது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் பதிவான வாக்குகள் இன்று (திங்கள்) எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே பாஜக முன்னிலை பெற்றது. ஆளும் கட்சியான காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது.

மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழல் உள்ளது. காங்கிரஸ் 21 இடங்களை கைபற்றும் நிலை உள்ளது. மார்க்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர் ஓரிடத்திலும் வெற்றி பெற்றார். இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாக அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீர்பத்திர சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக அங்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட பிரேம் குமார் துமால் தோல்வியடைந்துள்ளார். சுஜன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்தர் ரானாவிடம் தோல்வியடைந்தார்.

இமாச்சலப் பிரதேசத்தை பொறுத்தவரையில் காங்கிரஸின் வீரபத்திர சிங்கும், பாஜகவின் பிரேம் குமார் துமாலும் அசைக்க முடியாத சக்திகள். 1985களில் இருந்தே இருவரும் வலிமையான தலைவர்களாக வலம் வருகின்றனர். இருவரின் குடும்பமும் இமாச்சல பிரதேச தேர்தலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பே, பாஜகவில் பிரேம் குமார் துமாலுக்கு எதிராக கடும் கோஷ்டி சண்டை நிலவியது. அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கட்சி தலைமை தயக்கம் காட்டியது. அதேசமயம் துமால் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கொடிபிடித்தார்.

இதையடுத்து வேறு வழியின்றி கடைசி நேரத்தில் துமாலை முதல்வர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்தது. துமால் தற்போது தோல்வியடைந்துள்ளதால், முதல்வர் பதவிக்கு புதிதாக ஒருவரை, பாஜக தேர்வு செய்ய வேண்டும். இமாச்சலப் பிரதேச பாஜகவில் கடும் கோஷ்டி மோதல் நடந்து வரும் நிலையில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது பாஜக தலைமைக்கு சவாலாக இருக்கும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

BJP Win in Himachal. But…