உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் விதமாக, பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.பி. சாவித்ரி புலேவும்,
சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகேஷ் சச்சன் ஆகியோர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
டெல்லியில் ராகுல் காந்தி இல்லத்தில் ராகுலையும், பிரியங்கா காந்தியையும் சந்தித்துப்பேசி, தங்களை முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
குறிப்பாக உ.பி.யில் பஹாரியாச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யான சாவித்ரி புலே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகும். தலித் வாக்குகள் பெரும்பாலும் பஹாரியாச்சில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு திரும்பும்.
அதேபோல கடந்த 2009-ம் ஆண்டு பதேபூர் தொகுதியின் எம்.பி.யாக இருந்த ராகேஷ் சச்சனும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இவர் முலாயம் சிங் முதல்வராக இருந்தபோதும், அகிலேஷ் யாதவ் அரசிலும் எம்.எல்ஏ.வாகவும் இருந்தவர். இவர் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றது அந்த கட்சிக்கு பலத்தை அதிகரிக்கும்.
இது தொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறுகையில், ” வரும் மக்களவைத் தேர்தலில் பதேபூர் தொகுதியில் ராகேஷ் சச்சனுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு இருந்தது.
ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாதிக் கட்சி சேர்ந்து, பதேபூர் தொகுதி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால், அதிருப்தி அடைந்த ராகேஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். சமாஜ்வாதிக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அந்த கட்சியில் இருந்து விலகியது, அந்த கட்சிக்கு பின்னடைவுதான்.
அதேபோல, பஹாரியாச் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி,யானவர் சாவித்ரி புலே.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பாஜக தலைமையைக் கடுமையாக விமர்சித்து வந்தார். உ.பி. மாநில கிழக்குப்பகுதியில் தலித் சமூகத்தில் முக்கியத் தலைவராக சாவித்ரி புலே இருந்து வந்தார்.
ஆனால், பாஜகவில் தலித்களுக்கு மதிப்பில்லை, நசுக்கப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சாவித்ரி புலே குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், கட்சியின் தலைமையின் மீது அதிருப்தி அடைந்த சாவித்ரி புலே காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.
உ.பி.யில் கிழக்குப்பகுதியில் பாஜக, சமாஜ்வாதிக் கட்சியின் இரு முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அந்த கட்சிக்கு ஊக்கமாக அமையும் ” எனத் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், தேர்தல் நேரம் நெருங்கும் போது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பாஜகவிலிருந்து ஏராளமானோர் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதைக் காண முடியும்.
இப்போது இரு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது கட்சிக்கு ஊக்கமளிக்கும் ” எனத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பாஜக எம்.பி. சாவித்ரி புலே கூறுகையில், ” காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நாட்டின் அரசமைப்பைக் காக்க விரும்புகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் கரங்களை வலுப்படுத்தி பாஜகவைத் தடுக்கப் போகிறேன்” எனத் தெரிவித்தார்.