நூலறிமுகம் – அ.ராமசாமியின் "நாவல் என்னும் பெருங்களம்" : நாவலாசிரியர் இமையம்

 

Book reviewA.ramasami's book review

__________________________________________________________________________________________________________

 

ஒரு நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர் நாவலைப் படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

 

 

ஒரு நாவலைப் படிக்கிற சாதாரண வாசகன் அந்த நாவலைப் பிற நாவல்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. நாவலுக்குள் இருக்கிற பல்வேறு உள்ளடுக்குகள் பற்றியும் யோசிப்பதில்லை. ‘தனிமனிதனுடைய கதை அல்லது ஒரு குடும்பத்தினுடைய கதை’, “நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை” என்ற ஒற்றைத் தன்மையோடு முடித்துக்கொள்கிறான்.

 

 

விமர்சகன் சாதாரண வாசக மனநிலையிலிருந்து வேறுபட்டு, கூடுதல் கவனத்துடனும், கூடுதல் அக்கறையுடனும் ஒரு நாவலைப் படிக்கிறான். படித்ததோடு நிற்காமல் – தான் படித்த நாவல், வரலாற்று நாவலா? உளவியல் நாவலா? எதார்த்த, வட்டார, புதுபாணி, நவீனத்துவ, தத்துவங்களை பின்னணியாகக் கொண்ட நாவலா? என்று சமரசமற்ற ஆய்வியல் நோக்கோடு பார்க்கிறான். அதோடு நாவலுக்குள்ளிருக்கும், புதிர்த்தன்மைகளை, உள்ளடுக்குகளை அவிழ்க்க முயல்கிறான். நாவல்கலை என்பது என்ன? புனைவு என்பது என்ன? எது படைப்பாகிறது/ எது படைப்பாகவில்லை? அதற்கான காரண காரியங்கள் என்ன ? என்பதோடு, குறிப்பிட்ட நாவல் வாழ்வின் சாரம்சார்ந்து, ஜோடனையில்லாமல் பாசாங்கு இல்லாமல் எழுதப்பட்டுள்ளதா?, நாவலுக்கான சமூகப்பொருத்தப்பாடு என்ன? என்பதையும் ஆராய்கிறான். அப்படி ஆராய்கிறவனே விமர்சகன்.

 

 

இருபத்தி மூன்று நாவல்கள் பற்றியும், மூன்று படைப்பாளிகள் பற்றியும் அ.ராமசாமி எழுதிய கட்டுரைகளைப் படிக்கும்போது, அவருடைய ஆய்வியல் நோக்கம் மட்டுமல்ல, அவருடைய விமர்சனப் பார்வை, என்ன என்பதும் நமக்குத் தெளிவாகிவிடுகிறது. நாவல் என்னும் பெருங்களம் – நூல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அது, எதுபடிப்பு? எது கல்வி?என்ற கேள்வியை முன்வைப்பதால்.

 

– நாவலாசிரியர் இமையம்

 

நாவலென்னும் பெருங்களம், நற்றிணைவெளியீடு, ஈரோடு புத்தகச் சந்தையில் கிடைக்கும்

 

நன்றி : பேரா.ராமசாமியின் முகநூல் பதிவில் இருந்து…

 

________________________________________________________________________________________________________