விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (ஜேபிசிஏ) நிதி உதவியை நிறுத்தி வைத்ததாகத் தேசிய அதிவேக ரயில் கழகம் (என்ஹெச்எஸ்ஆர்சிஎல்) தெரிவித்துள்ளது
இந்திய அரசுக்கும், ஜேஐசிஏ அமைப்புக்கும் இடையே 1000 கோடி யென் (640 கோடி) கடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ள நிலையில்,
இன்னும் ஜேஐசிஏயிடம் இருந்து இதுவரை பணம் இந்திய அரசுக்கு வரவில்லை என்று என்ஹெச்எஸ்ஆர்சிஎல் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு புல்லட் ரயில் இயக்குவது பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் கோடியாகும்.
இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த மே மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரதமர் மோடி தலைமையில் நடந்தது.
ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்தத் திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் தொடக்கக் கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன.
இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சமீபத்தில் ஆயிரம் விவசாயிகள் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
விவசாயிகள் தங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டை அதிகப்படுத்த வேண்டும், கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான குளம், பள்ளிக்கூடம், சோலார் விளக்கு, கிராமத்துக்கு மருத்துவர் வேண்டும் என்றனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் வழியாக 108 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் பாதையில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குஜராத்தில் 850 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த 8 மாவட்டங்களில் 5 ஆயிரம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், ஜப்பானிய தூதர் இங்கு வந்து நிலம் கையகப்படுத்தப்படுவதால், பாதிக்கப்படும் விவசாய நிலங்களையும், சூழலை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதனால், நாளுக்குநாள் விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு வலுத்ததால், ஜேஐசிஏ நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, நிதியுதவியை நிறுத்தி வைத்தது.
இது குறித்து மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பான மத்திய அரசின் என்ஹெச்எஸ்ஆர்சிஎல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
”புல்லட் ரயிலுக்கு நிலத்தைக் கையகப்படுத்தப்படுவதால், பாதிக்கப்படும் விவசாயிகளின் நலனை நாங்கள் கருத்தில் கொள்கிறோம்.
ஸ சூழல் பாதிப்புகள், சமூக பாதிப்புகள், மக்களின் எண்ணங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வது, உள்நாட்டு மக்களுக்குச் செய்துகொடுக்க உள்ள திட்டங்கள் ஆகியவற்றின் அறிக்கையை நாங்கள் ஜப்பான் நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டோம்.
10 பில்லியன் யென் கடன் அளிப்பது தொடர்பாகவும் இந்திய அரசு, ஜேஐசிஏ அமைப்புடன் கையொப்பமும் செய்யப்பட்டுவிட்டது.
ஆனால், எந்தவிதமான நிதியுதவியும் அளிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.