முக்கிய செய்திகள்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கான தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைப்பு..

பீகார் மாநில அரசியலை உலுக்கிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டன.

இவ்வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் தவிர பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் மீது குற்றம் சாட்டப்பட்டு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து பணத்தை முறைகேடாக எடுத்த வழக்கில் 2013ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. லாலு, ஜெகனாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ. 25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட லாலு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதேபோல், தியோஹர் மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.84.5 லட்சத்தை முறைகேடாக எடுத்த வழக்கின் விசாரணையும் தனியாக நடந்தது. இதில், லாலு பிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 34 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். விசாரணைக் காலத்தின்போது 11 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் அப்ரூவர் ஆகிவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பளித்தார். பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகநாத் மிஸ்ரா உட்பட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை விபரங்கள் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால், சமீபத்தில் மரணம் அடைந்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு நேற்று இரங்கல் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. எனவே, தண்டனை விவரம் ஜனவரி 4-ம் தேதி (இன்று) வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் இன்று தண்டனை விவரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக லாலு பிரசாத், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று பிற்பகல் கோர்ட் அறையில் வழக்கில் தொடர்புள்ள வழக்கறிஞர்கள் தவிர பிற வழக்கறிஞர்களை வெளியேறும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார். இதனால் தண்டனை விவரத்தை உடனே வெளியிடுவார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனால், தண்டனை அறிவிப்பை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.