முக்கிய செய்திகள்

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல்

 


தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பீளமேட்டில், கோவை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு, கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில், மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், காந்திபுரம் அண்ணா சிலை அருகே தி.மு.க சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மத்தியப் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தோழமை கட்சியினர் 500 பேர் சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 28 இடங்களில் தி.மு.க உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மறியல் செய்து கைதுசெய்யப்பட்டனர்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆண்டிஅம்பலம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைதுசெய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். செம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் – தேனி சாலையில் சாலை மறியல் செய்தபோது கைதுசெய்யப்பட்டனர்.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் எம்.எல்.ஏ கீதாஜீவன் தலைமையில் தி.மு.க கூட்டணிக் கட்சியினர் தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை அம்பேத்கார் சிலை முன்பு தேனி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திமுக நகர செயலாளர் அபுதாகீர் தலைமையில் சாலை மறியலில்ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல், ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர், பாளையம் ஆகிய பகுதிகளிலும் மறியல் நடைபெற்றது.
திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கீழ்ப்பாலத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் ஆர்.முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே திருவாரூர் தி.மு.க நகரச்செயலாளர் பிரகாஷ் தலைமையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகை

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி மற்றும் சித்தர்காடு பகுதியில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.