முக்கிய செய்திகள்

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு..


பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும் வகையில் இரவோடு இரவாக 3,600 கோடி ரூபாய் அளவுக்கு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் அதிமுக அரசு மக்களின் அன்றாட வாழ்வுடன் விபரீத விளையாட்டை நடத்தியிருக்கிறது.

 

ஆங்காங்கு இதை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைப்பதும், போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் போன்றோர் மக்களின் போராட்டத்திற்கும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் ஆணவத்துடன் பதிலளித்திருக்கும் போக்கும் இந்த அரசை வழிநடத்திச் செல்லும் அமைச்சரவைக்கும், அதற்கு தலைமையேற்றிருக்கும் முதல்வருக்கும் இதயத்தில் ஈரமில்லை என்ற கொடூர மனப்பான்மையை எடுத்துக்காட்டுகிறது.

 

ஆகவே கடுமையான பேருந்து கட்டண உயர்வு, ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தடியடி, அமைச்சர்களின் ஆணவப் பேச்சு போன்றவற்றைக் கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திமுக சார்பில் 27.1.2018 சனிக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

 

திமுக நிர்வாகிகளும், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகர் அணி, சிறுபான்மை நலஉரிமை பிரிவு உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் பெருந்திரளாக பங்கேற்று, மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

 

ஒத்த கருத்துடைய தோழமை கட்சிகள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.