குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக தீர்மானம் கொண்டு வர வேண்டும்: பழ.நெடுமாறன்..

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் கொண்டு வராவிட்டால் திமுக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பழ.நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்திய உளவுத்துறை பாகிஸ்தான் அளிக்கும் பண உதவியாலும், தூண்டுதலாலும் போராட்டம் நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

உளவுத்துறையின் அறிக்கை கண்டிக்கத்தக்கது. குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு மதச்சாயம் பூச மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்திய உளவுத்துறையின் அறிக்கை விசமத்தனமானது, ஆழமான உள்நோக்கம் கொண்டது. இதை அனுமதித்தால் பல விபரீத விளைவுகள் ஏற்படும்.

இதற்கான உதாரணமாக காஷ்மீர் உள்ளது. காஷ்மீர் அரசு மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேபோல தமிழகமும் மாநில அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டும் இரண்டாக பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம்.

அரசியலமைப்புச்சட்டத்தின் படி இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தையும் நாடாளுமன்ற தீர்மானத்தின்படி இரண்டாக பிரிக்க முடியும்.

எனவே மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து போராடுவது ஒவ்வொரு உண்மையான குடிமகனின் கடமை ஆகும்.

இந்தியா முழவதும் 9 மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இதேபோல தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வராவிட்டால் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்.

அப்போது அதிமுக அரசின் இரட்டை வேடம் அம்பலமாகிவிடும்.எனவே திமுக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நீடிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஒளிபுரப்பும் ஊடகங்கள், செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

போராட்டங்களில் பங்கேற்கும் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்திராகாந்தி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட அவசரநிலைக்கு எதிராக போராடியது

பாஜகவின் முன்னோடி அமைப்பான ஜனசங்கம். ஆனால் தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலையை கொண்டு வந்துள்ளதும் அக்கட்சிதான்  என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பேச்சுரிமை, கருத்துரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள். அதை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்திலும் பல இடங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படுகிறது.

ஐ.நா சபையில் மனித உரிமை ஆணையம் மற்றும் அகதிகள் ஆணையம் ஆகியவை உள்ளன. இவற்றில் ஒரு நாட்டில் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைக்க வருபவர்களுக்கு எந்த நாடாக இருந்தாலும் அனுமதி அளிக்க வேண்டும்  என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் மதரீதியில் மக்களை பிளவுபடுத்துவது, ஐ.நா சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதற்கு தமிழர் தேசிய முன்னணி வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறது  என்றார்.