குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் இன்று தொடங்கி வைத்தார். படிவத்தில் முதல் கையெழுத்தைப் பதிவு செய்த ஸ்டாலின், தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 24-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி இன்று சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்காக உருவாக்கப்பட்ட படிவத்தில் ஸ்டாலின் தனது கையெழுத்தைப் பதிவு செய்தார்.

ஸஅதைத் தொடர்ந்து கொளத்தூர் மக்களிடம் வீடு வீடாகச் சென்று கையெழுத்து பெற்றார். மேலும், குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும் ஸ்டாலின் பொதுமக்களிடம் வழங்கினார்.

சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர்.

ஆவடியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கும்பகோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சென்னை துறைமுகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சென்னை ராயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், பாபநாசத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதுரையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ஈரோட்டில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தனர்.

திமுக எம்.பி.கனிமொழி தூத்துக்குடியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.

மத்திய பட்ஜெட் பாஜக விரும்பும் கலாச்சாரத் திணிப்பே : மு.க. ஸ்டாலின்…

முதல்வர் தலைமையில் செவ்வாயன்று தமிழக அமைச்சரவை கூட்டம்…

Recent Posts