குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக முதல்வர் பழனிசாமி

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது முதல்வர் பழனிசாமி பேசுகையில், மத்தியில் திமுக ஆட்சியில் பங்குவகித்தபோது, இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத்தரவில்லை.

இப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டதாக ஸ்டாலின் கூறுவது பொய். இலங்கை தமிழர்களுக்காக அதிமுக தொடர்ந்து போராடி வருகிறது.

எனவே, ஈழத்தமிழர்கள் பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. எந்த மதத்தினருக்கும் சிக்கல் ஏற்படாது.

இந்தியாவில் வாழும் யாருக்கும், குடியுரிமை திருத்தச் சட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் தெளிவுபடுத்திவிட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும் முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.