கலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன.
இதனால் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி புளோரிடாவில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பாருக்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுட்டுள்ளான். இதில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பாரை சுற்றி வளைத்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்