டெல்லி அரசின் பணிகளை நிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேசத்துரோகம் செய்வதுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
2016ஆம் ஆண்டு டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு எதிராக முழக்கங்கங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக, டெல்லி போலீசார் கன்னையா குமார், உமர் காலித் ஆகியோர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பான வழக்கில் கன்னையா குமார் உள்ளிட்ட கைதானவர்கள் மீது டெல்லி போலீசார் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
1200 பக்க குற்றப்பத்திரிகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி டி.ராஜாவின் மகள் அபரஜிதா, ஜேஎன்யு மாணவர் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் ஷீலா ரஷீத் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றன.
இதன் எதிரொலியாக கன்னையா குமார் விரைவில் கைது செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் எப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தீர்கள் என நீதிமன்றம் கேட்டது.
இதனால் டெல்லி அரசு தேசத்துரோக வழக்கில் குற்றப்பத்திரிகைக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கன்னையா குமார் தேசத்துரோக குற்றம் செய்தாரா? இல்லையா? என எனக்குத் தெரியாது. அதை சட்டத்துறை ஆய்வு செய்கிறது.
ஆனால், டெல்லியில் அரசின் பணிகளை பிரதமர் மோடி நிறுத்திவிட்டார். குழந்தைகளுக்கான பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதைத் தடுத்துவிட்டார்.
இது தேசத்துரோகம் இல்லையா?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.