முக்கிய செய்திகள்

“சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்” : மு.க.ஸ்டாலின் பாராட்டு…

அசுரன் படம், வெறும் திரைப்படம் மட்டுமல்ல அது பாடம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் குறித்து கருத்து தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான தனுஷின் அசுரன் படத்தை நேற்று மாலை தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் பார்த்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

இதனையடுத்து, படம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், “அசுரன் படம் மட்டும் அல்ல, பாடம் என்று குறிப்பிட்ட அவர், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் அசுரன்” என்றும் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

“கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள்” என பதிவிட்டிருந்தார்.

இதுமட்டுமல்லாமல், “வெற்றிமாறனையும், தனுஷையும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.”