பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவமதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன.
கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது பிற உறுப்பினர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில், ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ராஜேஸ்வரி புவனகிரி போலிஸாரிடம் புகார் அளித்த நிலையில், ஊராட்சி துணைத் தலைவர் மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை நாற்காலியில் அமரக்கூடாது என தரையில் அமர வைத்து கூட்டம் நடத்திய, ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலிந்து டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க எம்.பி கனிமொழி, “தலித் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தொடரக்கூடாது. தமிழக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாதி வேறுபாடு என்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என மனிதர்கள் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியான மனப்பான்மை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.