Cauvery dispute : A revision
_________________________________________________________________________________
நைல் நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமுகமான ஒரு தீர்வை எட்டிவிட முடிகிறது. ஆனால், ஒரே தேசத்துக்குள் உள்ள மூன்று மாநிலங்கள் இடையே தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கன அடிக் கணக்கில் பிரச்னைகள்.
பல லட்சம் கன அடி நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம் இனி எப்போதும் உயிர்த்தெழ முடியாத இறந்த காலம் ஆகிவிட்டது. வெறும் 15 ஆயிரம் கன அடி நீரை 10 நாள்களுக்குப் பகிர்ந்து கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் சொல்லியதற்கே சாலை மறியல், முழுக் கடையடைப்பு என தமிழகத்துக்கு எதிரான கர்நாடகத்தின் எதிர்ப்பு வெப்பம் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது என்றே கூறலாம்.
காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னை ஏதோ சில பத்து ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னை அல்ல. இது ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு காலச் சிக்கல். 1807-ஆம் ஆண்டில்தான் காவிரி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் முதன்முதலாகச் சிக்கல் தொடங்கியது. பேச்சுவார்த்தையும் அதே காலகட்டத்தில் தொடங்கியது. பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்த போதே, 1866-ஆம் ஆண்டு மைசூருக்கான பிரிட்டிஷ் நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே. சாங்கி மலைச் சரிவில் விழும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு ஒரு பெருந் திட்டத்தைத் தீட்டினார்.
இதற்கு முதலில் அப்போதைய சென்னை மாகாண அரசு ஒத்துக் கொண்டது. இருப்பினும், நாள்கள் செல்லச் செல்ல இதனால் சென்னை மாகாணத்துக்கு வரும் நீரின் அளவு குறையுமே என்று அச்சம் ஏற்பட்டது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 1892, பிப்ரவரி 18-ஆம் தேதி ஓர் ஒப்பந்தம் தயரானது. இதுதான் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான முதல் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின்படி, மைசூர் அரசு காவிரியின் குறுக்கே ஏதேனும் அணை கட்டத் திட்டமிட்டால், அதற்கு சென்னை மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும். பாசனப் பரப்பை அதிகரிப்பதற்கும் சென்னை மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது. மீண்டும் 1910-ம் ஆண்டு ஒரு பிரச்னை வெடித்தது. மைசூர் அரசு காவிரியின் குறுக்கே கண்ணாம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி கொள்ளளவில் ஓர் அணை (கிருஷ்ணராஜசாகர் அணை) கட்டத் திட்டமிட்டது. அதே காலகட்டத்தில் சென்னை மாகாண அரசும் சேலம் மாவட்டம், மேட்டூரில் ஓர் அணை கட்டத் திட்டமிட்டது.
இதுகுறித்தப் பேச்சுவார்த்தை பல சுற்றுகளாக நடைபெற்றது. ஆனால், ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படாதததால், இந்திய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சகம் இதில் தலையிட்டது. இதனால், 1924-ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தமானது இரு தரப்பினரும் அணையைக் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கியது. அது மட்டுமல்லாமல், இரு மாகாணங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு பாசனப் பரப்பை அதிகரித்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அதேநேரத்தில், இந்த ஒப்பந்தத்துக்கான ஆயுள் 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு கர்நாடகம் தான் வஞ்சிக்கப்பட்டதாகவே கருதியது. இதற்கிடையே, 1960-களில் கர்நாடக அரசு மேலும் இரண்டு அணைகள் கட்டும் பணிகளைத் தொடங்கியது. இதற்குத் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது.
ஒப்பந்தம் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு தலைபட்சமாகப் போடப்பட்டது. அதற்குக் கீழ்ப்படிய முடியாது என கர்நாடகம் வாதிட்டது. அதேநேரத்தில், 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தமும் காலாவதியாகிப் போனது.
பல சுற்றுப் பேச்சுவார்த்தை: “காவிரி கர்நாடகத்தில்தான் உற்பத்தி ஆகிறது. அதனால், எங்களுக்குத்தான் அதன் மீது அதிக உரிமை இருக்கிறது’ என்பது கர்நாடகத்தின் வாதம். “காவிரி தமிழ்நாட்டில்தான் அதிகத் தொலைவு பயணிக்கிறது. அதனால், எங்களுக்கே அதிக உரிமை இருக்கிறது’ என்பது தமிழகத்தின் நிலைப்பாடு.
இதையடுத்து, மீண்டும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. 1976-ஆம் ஆண்டு காவிரி உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கொண்டு, இரு மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட ஓர் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அப்போதைய தமிழக அரசு கலைக்கப்பட்டு, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தபட்டது. அதன்பிறகு தமிழகத்தில் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர். அரசு, இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீண்டும் 1892- 1924 ஒப்பந்தத்தையே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.
நீதிமன்றம் சென்ற விவசாயிகள்: எந்த உருப்படியான தீர்வும் எட்டப்படாததால், தஞ்சை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உச்ச நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 1990-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் இரண்டு மாநிலங்களும் பேசி, இந்தப் பிரச்னைக்கு அந்த ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டது. பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால், ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 1990-ஆம் ஆண்டு, ஜூன் 2-இல் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.
1980 முதல் 1990 வரை தமிழகமும், கர்நாடகமும் பங்கிட்டுக் கொண்ட நீரின் அளவை ஆராய்ந்து, 1991-ஆம் ஆண்டு, ஜூன் 25-ஆம் தேதி ஓர் இடைக்காலத் தீர்ப்பை இந்தத் தீர்ப்பாயம் வழங்கியது. அதன்படி, 205 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டும். அதேநேரத்தில், கர்நாடகம் தனது சாகுபடிப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் உயர்த்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகத்தில் பெரும் வன்முறை வெடித்தது. கர்நாடக வன்முறையில் ஏறத்தாழ 12 தமிழர்கள் மாண்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். இடைக்காலத் தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, அந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்தது.
1991-ஆம் ஆண்டு, டிசம்பர் 11 அன்று இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த ஆணையின்படி உரிய அளவு தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்தது. 1993, ஜூலையில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் பெய்த பெருமழையால் காவிரிப் பிரச்னையின் வெப்பம் குறைந்தது. 1995-ஆம் ஆண்டில் போதிய மழையின்மையால் காவிரிப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியது. தமிழகம் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றது. உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டுமென்று தமிழக அரசு வலியுறுத்தியது. உச்ச நீதிமன்றம் 11 டி.எம்.சி தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட்டது.
ஆனால், இதையும் கர்நாடக அரசு நிராகரித்தது. தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், கர்நாடக அரசு 6 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துவிட சம்மதித்தது.
1998-ஆம் ஆண்டு பிரதமரின் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம், கர்நாடக முதல்வர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க, காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
மழைப்பொழிவு காரணமாக எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்க, 2002-ஆம் ஆண்டு மீண்டும் நதி நீர்ப் பங்கீட்டில் பிரச்னை வெடித்தது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையம், தமிழகத்துக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் நீரை வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.
இறுதித் தீர்ப்பு: ஏறத்தாழ 16 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ஆயிரம் பக்கங்கள் கொண்ட தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு, பிப்ரவரி 5-இல் வழங்கியது. அதன்படி, கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி.யும், தமிழகம், புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 21 டி.எம்.சி.யும் எனத் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகத்திதில் அந்த ஆண்டு பிப்ரவரி 12-இல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 2007-ஆம் ஆண்டு, மார்ச் 18 அன்று அப்போதைய தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடக் கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஆனால், அதன்பிறகும் பிரச்னை ஓயவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதியே கருணை கூர்ந்து தண்ணீரைத் திறந்து விடுங்கள் என்று கெஞ்சி உத்தரவிடும் நிலைதான் ஏற்பட்டது. அதற்கும் தற்போது கன்னடர்கள் வெறியாட்டம் போட்டு வருகின்றனர். இதற்கு எதிராகத்தான் தமிழகத்தில் நாளை (2016, செப்-16) அன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
– புவனன்
____________________________________________________________________________________