காவிரியில் இன்று 3 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,22,530 கன அடி வீதமும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 69,583 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு நீடித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,77 000 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து 1,80,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 16 கண் மதகு வழியாக சீறி பாயும் காவிரி, நுங்கும், நுரையுமாக கரை கடக்கும் ஆவேசக் கோலத்தை காட்டுகிறது.
சேலம் மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள எடப்பாடி, பொறையூர், ரெட்டியூர், பூலாம்பட்டி உள்ளிட்ட 6 ஊர்களுக்கு செல்லும் சாலைகள் வரை காவிரி நீர் வந்துவிட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் காவிரியோடு பவானி ஆறும் சேர்ந்து கொள்வதால், சங்கத்துறை கடல் போல மாறி உள்ளது. பவானி சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 65,000 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் காவிரியுடன் கலந்து வெள்ளமாக பாய்ந்து வருகிறது.
மாயனூர் கதவணையில் 78 மதகுகளும் காவிரிக்கு வழி விட்டு திறந்துள்ளதால், வினாடிக்கு 2 லட்சத்து 26 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
முக்கொம்பு அணையில் இருந்து வினாடிக்கு 1,65000 கன அடி வீதம் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதே போல காவிரியில் வினாடிக்கு 50, 000 கன அடி வீதம் தண்ணீர் பாய்கிறது.
திருச்சி நகருக்குள் வரும் காவிரி கரை கொள்ளா தண்ணீரை கொண்டுள்ளதால், அந்த மாநகரில் உள்ள அனைத்து படித்துறைகளும் மூடப்பட்டுள்ளன. குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூட காவிரி கரைக்கு செய்ய வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடி நீர் பாய்வதால் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் கீழணை அருகே உள்ள விநாயகமூர்த்தி நகர் உள்ளிட்ட சில இடங்களில் வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துள்ளது. அணை பாதுகாப்பு குறித்து வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு செய்தார். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் கன ரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டதால், கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் சிதம்பரம், கடலூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், காவிரியில் 3,00,000 கன அடி வீதம் தண்ணீர் வருமென எதிர்பார்க்கப்படுவதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Cauvery flood… Alarm to 8 districts