காவிரி விவகாரம் : முதல்வர், துணை முதல்வர் சென்னையில் உண்ணாவிரதம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். அதிமுக வெளியிட்ட பட்டியலில் பெயர் இடம்பெறாத நிலையிலும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் அறிவித்த 6 வாரங்களுக்குள் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்தது. இதன்படி இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகே நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் ஆகியோர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.