முக்கிய செய்திகள்

காவிரி விவகாரம்: இன்று மனிதச் சங்கிலி போராட்டம்..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடக்க உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம், மே 3ஆம் தேதிக்குள் காவிரி விவகாரத்தைத் தீர்ப்பதற்கான வரைவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பின் அது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் கருத்தைக் கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் ஏமாற்றமடைந்த தமிழக அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி இன்று புதுக்கோட்டையில் நடக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் பல்வேறு இடங்களில் நடக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.