கோதாவரி – காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை பிரதமர் ஒப்புக்கொண்டதாகக் கூறி, அதை தன் சாதனையாக காட்டிக்கொள்ள முதல்வர் பழனிசாமி நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றுவதற்கான இந்தத் திட்டத்தை தமது சாதனை போல காட்டிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி நாடகமாடுவது கண்டிக்கத்தக்கதாகும்.
சேலத்தின் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது கோரிக்கையை ஏற்றே கோதாவரி – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் ஒப்புக்கொண்டதாக பெருமிதம் பேசியிருக்கிறார். கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் குறித்து தம்மைப் போலவே தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி அத்திட்டம் தமிழகத்திற்கு கிடைத்த வரம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயன்றிருக்கிறார். கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் புதிய திட்டம் அல்ல; அத்திட்டம் குறித்து பேசப்படுவது இது முதல் முறையும் அல்ல; இதற்கெல்லாம் மேலாக கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் அரசியல் காரணங்களுக்காக சாத்தியமாகாத திட்டம் என்பது தான் உண்மை என்பதை முதல்வர் உணர வேண்டும்.
கோதாவரி – காவிரி இணைப்பது பற்றி 1970-ம் ஆண்டுகளில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதே திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், அப்போதே அந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. அப்போதும், அதற்குப் பிறகும் எப்போதெல்லாம் காவிரி பிரச்சினையில் துரோகம் இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழகத்தை ஆசைகாட்டி ஏமாற்றுவதற்கான கருவியாக மட்டுமே இத்திட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், ஒருமுறை கூட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலைக்கு வந்ததில்லை. இப்போதும் கூட, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வரும் நிலையில், கொந்தளித்துள்ள தமிழ்நாட்டு மக்களையும், விவசாயிகளையும் சமாதானம் செய்வதற்காகத் தான் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முன்வைக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை மார்ச் 29-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்திற்கு வந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் அது தொடர்பாக அடுக்கடுக்காக வினாக்கள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு பதிலளிக்க முடியாத நிதின் கட்கரி, பிரச்சினையை திசை திருப்பும் வகையில் கோதாவரி ஆற்றைக் காவிரியுடன் இணைத்து தமிழகத்திற்கு 150 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்படும் என்று அறிவித்தார். தமிழகத்தை ஏமாற்றுவதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையிலெடுத்த அதே ஆயுதத்தை, இப்போது சொந்த மாநில மக்களை ஏமாற்றுவதற்காக முதல்வர் பழனிசாமி கையிலெடுத்திருக்கிறார். முதல்வர் பழனிசாமி தமிழக மக்களின் பிரதிநிதியா… மத்திய ஆட்சியாளர்களின் பிரதிநிதியா? தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுகிறாரா… மத்திய ஆட்சியாளர்களைக் காப்பாற்ற அவர் பாடுபடுகிறாரா? என்ற வினாக்களுக்கு அவரது இந்த நிலைப்பாடே பதிலளிக்கும்.
கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட எந்த நதிகள் இணைப்புத் திட்டத்திற்கும் பாமக எதிரி அல்ல. இன்னும் கேட்டால் நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக தொடக்கம் முதலே குரல் கொடுத்து வருவது பாமக தான். ஆனால், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் பலரும் எதிர்பார்ப்பதைப் போல அவ்வளவு எளிதானது அல்ல. இது 5 மாநிலங்கள் சம்பந்தப்பட்ட திட்டம் ஆகும். மராட்டிய – சத்தீஸ்கர் எல்லையில் ஓடும் கோதாவரியின் துணை நதியான இந்திராவதியில் அணை கட்டி, அதில் தேங்கும் தண்ணீரை தெலங்கானா மாநிலம் காலேஸ்வரம் அணைக்கு கொண்டு செல்லவேண்டும்.
அங்கிருந்து ஆந்திர மாநிலம் போலாவரம் அணை, நாகர்ஜூனா சாகர் அணை வழியாக கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்பட்டு, சோமசிலா அணை மூலம் பெண்ணாறு வழியாக காவிரிக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதுதான் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் ஆகும். கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெறுவதே சாத்தியமாகாத நிலையில், கேட்பதற்கே தலைசுற்றும் இந்தத் திட்டத்தை தமிழகம் தவிர்த்த 4 மாநிலங்களின் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்துவது சாத்தியமா? என்பதை தமிழ்நாட்டு மக்களும், வேளாண் பெருமக்களும் முடிவு செய்து கொள்ளலாம். இதற்கு மாற்றாக குழாய் வழியாக கோதாவரி நீரை கொண்டு வரும் திட்டமும் உள்ளது. ஆனால், அதுவும் சாத்தியமாகாது.
கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் குறித்து பேச்சு எழுந்ததுமே, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் 45 கிராமங்கள் மூழ்கி விடும்; 70 ஆயிரம் பேர் சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று கூறி தெலங்கானா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒருவேளை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும்கூட கோதாவரி நீர் 3 மாநிலங்களைக் கடந்து தான் தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதால், இப்போது கர்நாடகத்துடன் மட்டும் போராடும் தமிழகம், இனி 3 மாநிலங்களுடன் போராட வேண்டியிருக்கும். தென்னிந்திய நதிகள் அனைத்தும் இணைக்கப்படும் போது வேண்டுமானால் கோதாவரி- காவிரி இணைப்பால் தமிழகத்திற்கு பயன்கிடைக்கலாம். அதற்கு முன்பாக இந்த திட்டம் குறித்து பேசுவதெல்லாம் போகாத ஊருக்கு வழி காட்டுவதைப் போன்றதே. இது தமிழகத்தின் நீர் தேவையை நிறைவேற்றாது.
குறுவைப் பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாவிட்டால் பாசன மாவட்டங்களில் பேரழிவு காத்திருக்கிறது. இதைத் தடுக்க ஒரே வழி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான். இதை செய்யாமல் மத்திய ஆட்சியாளர்களின் ஊதுகுழலாக மாறி தமிழக மக்களை ஏமாற்றும் சதியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபடக்கூடாது. மாறாக மத்திய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.