காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரை’
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு செயலாளர்களே, அனைத்து கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளே, விவசாய சங்க பிரதிநிதிகளே அனைவருக்கும் காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
காவிரி நம் அனைவரின் உணர்வுடனும் ஐக்கியமாகியிருக்கும் உயிராதாரப் பிரச்சினையாக இருக்கிறது. அரசியல் வேறுபாடுகளை எல்லாம் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இன்றைக்கு நாம் அனைவரும் தமிழகத்தின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் வாழ்வு உரிமைகளுக்காக ஒரேநோக்குடன் ஒன்று கூடியிருக்கிறோம் என்பது உள்ளபடியே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழகத்தின் பொது நலன்களைக் காப்பதில் இந்த ஒற்றுமை உணர்வு தளராமல் தொடர வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
1892 மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக முதலில் கர்நாடக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். அமைச்சர்கள் மட்டத்திலும், முதலமைச்சர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
ஆனாலும் தீர்வுக்கான அறிகுறிகள் எதுவும் காணக் கிடைக்காத காரணத்தால், வேறு வழியின்றி, நடுவர் மன்றத்தை நாடினோம். 205 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு அளித்து இடைக்கால உத்தரவை நடுவர் மன்றம் பிறப்பித்தது.
ஆனால் அந்த இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ள மாதாந்திரத் தண்ணீர் அளவினை மழை வந்த காலம் தவிர, ஒரு வருடம் கூட, கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு திறந்து விட்டது இல்லை.
பிறகு நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பையும் அளித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலும் எந்த மாதத்திலும் தண்ணீரைத் திறந்து விட கர்நாடக அரசு முன்வந்ததில்லை. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் நாம் உச்சநீதிமன்றத்தை அணுகி தண்ணீரை திறந்து விடுவதற்கு உத்தரவு பெற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றாலும், அந்த உத்தரவையும் கர்நாடக மாநில அரசு நிறைவேற்ற நினைத்ததில்லை.
இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் தான், 16.02.2018 அன்று, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் நமக்கு 192 டி.எம்.சி. காவிரி நீர் கிடைக்கும் என்ற நிலைமாறி, இப்போது அது 177.25டி.எம்.சி.யாகக் குறைந்து விட்டது. இதுதான் இன்றைக்கு தமிழக மக்கள் மத்தியில் – விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த திட்டம் (Scheme) ஆறு வாரத்திற்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது; இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அறுதியிட்டுக் கூறியிருப்பது நமக்கெல்லாம் ஆறுதலாக உள்ளது.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்புக்கு இப்போது உச்சநீதிமன்றம் காலவரம்பு நிர்ணயித்துள்ளது; அதாவது, உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ள நீர்ப்பங்கீடு முறை 15 வருடத்திற்கு அமலில் இருக்கும் என்று கூறியிருப்பதை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறை நியாயம் கேட்டுச் செல்லும் போதும் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரின் அளவு குறைக்கப்படுவதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு நாம் இடம் கொடுத்து விடவும் கூடாது. அதில் தமிழக அரசு கவனமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
காவிரி இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த அமைக்கப்படும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு இரண்டும் பக்ரா நங்கல் நதிநீர் பங்கீட்டின் அடிப்படையில் தான் என்று நடுவர் மன்றம் தெளிவாக கூறியிருக்கி றது. அதேபோல் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொள்வது என்ற வாதத்தில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நடுவர் மன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டித்தான் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் உச்சநீதி மன்றம், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கர்நாடகாவிற்கு அதிக நீர்ப்பங்கீடு அளித்துள்ளதையும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள் என்று நேரடியாக மத்திய அரசுக்குச் சுட்டிக்காட்டாமல் இருப்பதையும் நாம் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
தீர்ப்பின் 452 முதல் 457 வரையிலான பக்கங்களில், 1956-ஆம் வருடத்திய நதிநீர் தாவா சட்டத்தில் உள்ள “Scheme” என்பதை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், 30.9.2017 அன்று மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, இந்த “ஸ்கீம்” என்பதை உருவாக்குவதற்கு, மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் வாதிட்டார்.
“ஸ்கீம் உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்குத் தான் இருக்கிறது” என்ற மத்திய அரசின் வாதத்தை இப்போது வெளிவந்துள்ள தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், மீண்டும் மத்திய அரசு இதே கருத்தினைச் சொல்லிக் காலம் கடத்த அனுமதித்துவிடக் கூடாது. அதில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ஆகவே, காவேரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ள 16.2.2018ஆம் தேதியிலிருந்து 6 வாரங்களுக்குள் உருவாக்க நாம் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தர வேண்டும். இங்கே இருக்கின்ற அனைத்துக் கட்சி தலைவர்களையும் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அழைத்து சென்று பிரதமரைச் சந்தித்து முதலில் “காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்துக் கொடுங்கள்” என்று வலியுறுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்தவரை தமிழகத்திற்குக் குறைக்கப்பட்டுள்ள தண்ணீரான 14.75 டி.எம்.சி.யை திரும்பப் பெறுவதற்கு என்ன வழி என்பது பற்றி அரசு சட்டரீதியாக ஆலோசித்து, அதனை அனைத்துக் கட்சிகளிடம் தெரிவித்து, ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். காவிரிநீர் பெறுவது குறித்த முயற்சிகள் ஒருபுறமிருக்க, வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் அவர்கள் கூறியிருப்பது போல், “வாட்டர் செக்யூரிட்டி போர்டு” ஒன்று அமைத்து காவிரி நீர் சேமிப்பு, சிக்கனமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் நாம் ஈடுபட வேண்டும்.
மழை நீரைச் சேமித்து வைப்பது, வெள்ள காலங்களில் தண்ணீரைச் சேமித்து வைப்பது, குளம், ஏரிகள், ஆறுகள், அணைகள் போன்றவற்றை காலமுறை வாரியாகத் தூர்வாரி ஆழப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள “நீர்பாசனத்தை” பொதுப்பணித் துறையிலிருந்து பிரித்து, அதற்குத் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்றும்; வேளாண்மைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கையினைத் தயாரித்து வெளியிட வேண்டுமென்றும் தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி உரிமையை நிலைநாட்ட அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் முழுஅளவிலான ஆதரவை அளிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.