முக்கிய செய்திகள்

காவிரி விவகாரத்தில் வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: வைகோ வேண்டுகோள்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) வைகோ வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நதிநீர் உரிமை மீட்புப் போராட்டத்தில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஈடுபட்டிருக்கிறது. இந்திய வரலாற்றில் வேறெந்தப் பிரதமரும், எந்த மாநிலத்திலும் சந்திக்காத எதிர்ப்பை ஏப்ரல் 12-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி எதிர்கொண்டார். தமிழர் இல்லம் தோறும் கருப்புக் கொடிகள் பறந்தன. சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்;

“பிரதமர் மோடியே திரும்பிச் செல்லுங்கள்” என்ற முழக்கத்தை இளைஞர்கள் எழுப்பினர். காவிரியில் நமது உரிமை நிலைநாட்டப்படும் வரையில் தமிழகத்தில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஏப்ரல் 16-ம் தேதி திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

எனவே திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏப்ரல் 23-ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனிதச் சங்கிலி போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் வெற்றிகரமாக நடத்துவதற்கு கடமை ஆற்ற வேண்டும்.

தமிழக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், வர்த்தக பெருமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் ஏப்ரல் 23-ல் நடைபெறும் மனிதச் சங்கிலியில் கைகோர்த்து அறப்போராட்டத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.