முக்கிய செய்திகள்

காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது : நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கம்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் நிச்சயம் கிடைக்கும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘செயல்திட்டம்’ (ஸ்கீம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்” என உத்தர விட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிந்து பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.

உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடியும் கடைசி நாளில் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள, ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்பதற்கு விளக்கம் என்ன என சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசின் நீர்வளத் துறை விளக்கம் கோரியது. மேலும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, குறிப்பாக செயல் திட்டம் (ஸ்கீம்) என்ற வார்த்தைக்கு கர்நாடகாவும், தமிழகமும் இரு வேறுபட்ட விளக்கங்களை அளிக்கின்றன.

எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும், இதற்காக கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

‘‘தமிழக அரசு தொடர்ந்தள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் . தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் நிச்சயம் கிடைக்கும்’’ என கூறினர். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மேலாண்மை வாரியம் குறித்து குறிப்பிடப்படவில்லை. திட்டம் குறித்தே கூறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம்அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று (ஏப்.,2) விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் குறித்து குறிப்பிடப்படவில்லை. திட்டம் குறித்தே கூறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.