தமிழகம், கர்நாடகா மாநிலங்களிடையே நிலவி வரும் ஆண்டுகள் கணக்கான காவிரி பிரச்சினைக்கு ஒருமாதத்துக்குள் தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதாவது இந்தப் பிரச்சினையில் போதுமான அளவுக்கு குழப்பங்களை ஏற்படுத்தியாகிவிட்டது, இனி ஒருமாதத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், மற்றும் சந்திராசூட் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகள், 2007-ம் ஆண்டு காவிரி நதிநீர் தீர்ப்பாயம் வழங்கிய நதிநீர்ப் பங்கீடு உத்தரவுக்கு எதிராக செய்த முறையீடுகள் மீது செப்டம்பர் 20, 2017-ல் மாராத்தான் விசாரணை நடைபெற்றதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
2016-ம் ஆண்டு கிரண் குமார் மஜூம்தார் ஷா என்ற சமூக ஆர்வ்லர் பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதில் உச்ச நீதிமன்றத் தலையீடு கோரி மனு செய்திருந்தார். அதில் குடிநீருக்கான உரிமை, வாழ்வாதாரத்துக்கான உரிமையை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
பெங்களூருவில் நீர் பற்றாக்குறை
”பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை இருந்து வருகிறது. பெங்களூரு நகரத்துக்கான நீர்த்தேவை மட்டும் ஆண்டுக்கு 10 டிஎம்சி ஆகும். காவிரி படுகை மாவட்டங்கள், பெங்களூரு உட்பட 26 டிஎம்சி நீர்த்தேவை உள்ளதாகும்” என்று அந்த மனுவில் ஷா குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டால் ஹார்ங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் பெங்களூரு குடிநீர் தேவைக்கான நீர் இல்லாது பற்றாக்குறை ஏற்படும், எனவே இது மிகவும் அபாயகரமான ஒரு நிலை. இதன் மீது அவசரமான கவனக்குவிப்பு தேவை, என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், காவிரி பிரச்சினையில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாக்கப்பட்டன, இதனை முடிவுக்குக் கொண்டுவர ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.