முக்கிய செய்திகள்

காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யுமா?..

காவிரி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காவிரி வரைவு செயல் திட்டத்தை மத் திய அரசு இன்று தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இறுதித் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 6 வார காலக்கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காத மத்திய அரசு, இறுதித் தீர்ப் பில் உள்ள ‘ஸ்கீம்’ என்பதற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தது.

 அதேநேரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மத் திய அரசு மீது தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இறுதித் தீர்ப்பை செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், கர்நாடகத்தில் தேர்தல் நடப்பதால் மத்திய அரசு கால அவகாசம் கோரியது.

கடந்த 8-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத் திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, ‘‘காவிரி வரைவு செயல் திட்டம் தயாராக உள்ளது. பிரதமரும் மத்திய அமைச்சர்களும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி வரைவு செயல் திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியவில்லை. எனவே, 10 நாள் அவகாசம் அளிக்க வேண் டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும், ‘‘கர்நாடகத்தில் சட் டம் – ஒழுங்கு பாதிக்கப்படும் சூழலை மத்திய அரசு விரும்பவில்லை. எனவே, வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்’’ என மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து மே 14-ம் தேதி காலை 10.30 மணிக்கு மத்திய நீர்வளத் துறை செயலா ளர் நேரில் ஆஜராகி காவிரி வரைவு செயல் திட்டத்தை தாக் கல் செய்யுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங், ‘‘இனி அவகாசம் கேட்க மாட்டோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி மே 14-ம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்வோம்’’ என கூறியிருந்தார். எனவே, காவிரி வரைவுத் திட்டம் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனால், வரைவு செயல் திட்டத்துக்கு ஒப்புதல் பெற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இதுவரை நடக்கவில்லை. இதை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ‘கர்நாடக தேர்தல் பிரச்சாரம் முடிந்தும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடக்கவில்லை. எனவே, காவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யுமா என்பது சந்தேகமாக உள்ளது. அப்படியே தாக்கல் செய்தாலும் அதன்படி அமைக்கப்பட உள்ள அமைப்பு, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்காது‘ என தெரிவித்துள்ளார்.

திமுக ஆதரவு கட்சிகள் கூட்டம்

இதற்கிடையே, காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 9 கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை (15-ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. ‘‘காவிரி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்’’ என ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.