இது தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு காவிரிநதிநீர் உரிமைப் போராட்டத்தினை நினைவுபடுத்துவதற்கு மட்டுமல்ல, கழகத்தின் மீது அவதூறு சேற்றை அள்ளிஇறைக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு தெளிவான விளக்கம் தருவதற்கும் இந்த மடல் பயன்படட்டும்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் மீதான வழக்கினில் தமிழகத்தின் நலன் காக்கும் நியாயமான வாதங்கள் ஏராளமாக இருந்தும் அவற்றை உரிய முறையில் எடுத்து வைக்கத் தவறிய இன்றைய ஆட்சியாளர்களால், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது வெளிவந்த காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மூலம் தமிழகத்திற்குக் கிடைத்த 192 டி.எம்.சி. காவிரி நீரில் 14.75 டி.எம்.சி. நீரைப் பறிகொடுத்து விட்டு நிற்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி காவிரி வரலாறு முழுவதையும் அறிந்துகொள்ளாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது வேதனையளிக்கிறது.
“1924-ஆம் ஆண்டு காவிரி நதி நீர் ஒப்பந்தப்படி உபரி தண்ணீர் பகிர்வது குறித்த மறு ஆய்வினை மேற்கொண்டிருப்பதால், 1974ல் இந்த ஒப்பந்தம் செல்லும்” என்று காவிரி நடுவர் மன்றம் தனது 5.2.2007 தேதியிட்ட இறுதி தீர்ப்பில் தெளிவுபடுத்தி, தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டியிருக்கின்ற நிலையில், அந்த வரலாறு கூட தெரியாமல் காவிரி ஒப்பந்தம் 1974ல் மறு ஆய்வு செய்யப்படாததால்தான் தமிழகத்தின் உரிமை பறி போய்விட்டது என்று ஒரு கற்பனையான கூற்றை முதலமைச்சரே கூறியிருப்பது வினோதமாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கே.எல்.ராவ் தலைமையில் காவிரி ஆறு பாயும் மாநிலங்களுக்கு இடையிலான முதலமைச்சர்களுடன் நடத்திய அந்த மறு ஆய்வு குறித்தும், அதில் தமிழகத்தின் முதல்வராக தலைவர் கலைஞர் அவர்கள் பங்கேற்றது குறித்தும். ‘திடுதிப்’பென முதல்வர் பதவிக்கு வந்தவரான எடப்பாடி பழனிச்சாமி மறந்திருந்தாலும், தமிழகத்தின் காவிரி உரிமை தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் நிலைநாட்டப்பட்டது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
காவிரி நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கை ஏதோ அதிமுக ஆட்சியில்தான் வைக்கப்பட்டது போன்ற மாயத் தோற்றத்தை அறிக்கையில் உருவாக்கியிருக்கிறார். ஆனால் முதன் முதலில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 05.09.1969 அன்றே முன் வைக்கப்பட்டது என்பது ஏனோ அவருக்கு தெரியவில்லை. அது மட்டுமின்றி மீண்டும் 09.02.1970-ல் பிரதமருக்கு கடிதம் மூலம் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கோரிக்கை வைக்கப்பட்டு, 8.7.1971 அன்று தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சியின் போது காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் மறந்து விட்டார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தை அன்று முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் அவர்களுக்கு அனுப்பி வைத்து “உடனடியாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்ததையும், 1969-ல் கடிதம் எழுதியது முதல் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களையும் இந்த அறிக்கை விடும் முன்பு சட்டமன்ற நூலகத்திற்கு சென்று அங்குள்ள காவிரி தொடர்பான சட்டமன்ற நடவடிக்கை பதிவேடுகளை முதலமைச்சர் படித்துப் பார்த்திருக்க வேண்டும். அதற்கு எல்லாம் அவருக்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும், திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனையை அ.தி.மு.க.வின் சாதனையாக அபகரித்துக் கொள்ள நினைப்பதும், தி.மு.கழகத்தின் மீது பழிபோட்டு திசை திருப்ப உண்மைக்கு மாறானதைச் சொல்ல நினைப்பதும் ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல.
27 முறைக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எதனையும் எட்ட இயலவில்லை என்பதால் தலைவர் கலைஞர் அவர்களின் வலியுறுத்தலின் பேரில் 2.6.1990 அன்று மத்தியில், பிரதமராக இருந்த திரு.வி.பி.சிங் அவர்கள் தமிழ்நாட்டின் நிலை உணர்ந்து காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்கால உத்தரவு வழங்க அதிகாரம் இருக்கிறது என்று 10.1.1991 அன்று உச்சநீதிமன்றம் வரை சென்று ஆணை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அதன் அடிப்படையில்தான் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்கும் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளிவந்தது. ஆனால் காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு 09.06.1992-ல் அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு 14.4.1993 வரை பதிலளிக்காமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்ததை யாரும் மறந்துவிட முடியாது. 1991 முதல் 1996 வரை இருந்த அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
1996-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் அன்றைய ஐக்கிய முன்னணி அரசின் பிரதமர் திரு.ஐ.கே. குஜ்ரால் அவர்கள் இருந்த போது காவிரி வரைவுத் திட்டம் உருவாக்கியதும், பிறகு அந்தத் திட்டத்தின் அடிப்படையில், அடுத்து வந்த ஆட்சியில், பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள், பிரதமரைத் தலைவராகக் கொண்ட காவிரி நதி நீர் ஆணையத்தை அமைப்பதற்காக, திரு வாஜ்பாய் அவர்களுடன் 9 மணி நேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தி 07.08.1998 அன்று அந்த ஆணையம் உருவாகக் காரணமானவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கும் எடப்பாடி திரு பழனிச்சாமிக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆனால் பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை “கூடிக் கலையும் கிளை போன்றது” என்றும்; “பல் இல்லாத ஆணையம்” என்றும்; இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையிலான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்; எள்ளி நகையாடி தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராகப் பேசியதும்; காவிரி நதி நீர் ஆணைய கூட்டத்தில் பங்கேற்காமல் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளானவரும் அம்மையார் ஜெயலலிதா தான். நடுவர் மன்றம் அமைப்பது உள்ளிட்ட தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அனைத்துக் கட்சி கூட்டத்திற்குகூட அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க கலந்து கொண்டதில்லை. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற காவிரி தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்று தன் கருத்துக்களை கூறியிருக்கிறது என்பதையும் சேர்த்தே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
காவிரி நடுவர் மன்ற விசாரணையில் அ.தி.மு.க. அரசு முழுக்கவனம் செலுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டு, வெற்று அரசியல் மட்டுமே நடத்திக் கொண்டிருந்த நிலையில், 2006-ல் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் மீண்டும் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், நடுவர் மன்ற விசாரணையை முடுக்கி விட்டு, வேகப்படுத்தி, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு 5.2.2007 அன்று வெளிவரக் காரணமாகவும், தமிழகத்திற்கு 192 டி.எம்.சி தண்ணீர் கிடைப்பதற்கு ஆணித்தரமாக வாதங்களை எடுத்துரைக்கச் செய்தது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் இந்த இறுதித் தீர்ப்பை கொச்சைப்படுத்தியது மட்டுமல்லாமல் “ஏற்றுக் கொள்ள முடியாத தீர்ப்பு” என்று இழித்துரைத்து, “கர்நாடகத்திற்கு ஆதரவான தீர்ப்பு” என்று ஏளனம் செய்ததுதான் அ.தி.மு.க. தலைமை.
அது மட்டுமின்றி, . இந்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று கேட்டவர் இன்றைய முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள அவரது ‘புரட்சித் தலைவி’ மறைந்த ஜெயலலிதா அம்மையார் என்பதையும் நினைவூட்டுகிறேன். காவிரி நீரில் உரிமையுள்ள அனைத்து மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த காவிரி மேல்முறையீட்டு வழக்குகளால்தான், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அரசிதழில் வெளியிடுவது காலதாமதம் ஆனதே தவிர தி.மு.க.வினால் அல்ல என்பதை காவிரியின் அரிச்சுவடி தெரிந்தவர்கள் கூட உணருவார்கள். மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடலாம் என உத்தரவிட்டபிறகே, மத்திய அரசால் அவ்வாறு வெளியிடப்பட்டது. இந்த வரலாற்றை மறைத்து, யார் பெற்ற குழந்தைக்கோ, தான் பெயர் சூட்டுவதுபோல, காவிரிக்கு உரிமை கொண்டாட நினைக்கிறது அ.தி.மு.க.
நான் கேட்க விரும்புவதெல்லாம் 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்ட போதும், அதன் பிறகும், ஆட்சியில் இருப்பது அ.தி.மு.க.தானே! இந்த நான்கு வருடமாக என்ன செய்து கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சி? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போனதற்கு 2011 முதல் இன்றுவரை ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசுதானே காரணம்! “மூன்று தினங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள். அதாவது 4.10.2016க்குள் அமைக்க வேண்டும்” என்று 30.9.2016 அன்று உச்சநீதிமன்றமே மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நிலையில் அதை கோட்டை விட்டது எந்த அரசு? சாட்சாத் அதிமுக அரசுதான்! “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது” என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு வாதிட்ட போது, மாநிலத்தை ஆட்சி செய்யும் அதிமுக எங்கே பூ பறித்துக் கொண்டிருந்ததா?
இந்தியாவிலேயே நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் அ.தி.மு.க.வின் கையில் 50 எம்.பிக்கள் இருக்கிறார்களே.. நாடாளுமன்றத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன? மோடி அரசின் பகோடாவை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களா?
இப்போது 16.12.2017 அன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் நடுவர் மன்றம் ஏற்கனவே நிலைநாட்டியுள்ள தமிழகத்தின் காவிரி உரிமைகளை உறுதி செய்துள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் அப்படி உறுதி செய்யப்பட்ட அம்சங்கள் எல்லாம் முறைப்படி காவிரி நடுவர் மன்றத்தின் முன்பு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எடுத்து வைத்து வாதாடிய காரணத்தினால்தான் நடுவர் மன்றம் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டியது என்பதை முதலமைச்சர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதே பெங்களூர் மாநகர குடிநீர் தேவைக்கான கோரிக்கை காவிரி நடுவர் மன்றத்தில் முன்பும் வாதிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள நிலத்தடி நீர் குறித்தும் வாதிடப்பட்டது. ஆனால் இரண்டையும் ஆக்கபூர்வமான வாதங்கள் மூலம் நடுவர் மன்றத்தில் எடுத்து வைத்து, “காவிரி படுகையில் உள்ள நிலத்தடி நீரை கணக்கில் எடுத்துக் கொண்டு நீரை பங்கிட முடியாது” என்று புள்ளிவிவரங்களுடன் வாதிட்டு காவிரி இறுதி தீர்ப்பில் தமிழகத்தின் உரிமையை நடுவர் மன்றம் முன்பு நிலைநாட்டியது கழக அரசு என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆனால் அதே பழைய வாதங்களை இப்போது உச்சநீதிமன்றத்தின் முன்பு கர்நாடக மாநிலம் மீண்டும் முன் வைத்த போது அதை புள்ளிவிவரங்களுடன் முறியடிக்க முடியாமல் கோட்டை விட்டு, தமிழகத்தின் காவிரி உரிமையை பறிகொடுத்திருப்பது திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு என்று மீண்டும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
“நிலத்தடி நீரை தீர்மானமாகவும் தெளிவாகவும் கணக்கிட முடியாது” என்று நடுவர் மன்றத்தின் முன்பு கர்நாடக அரசின் சாட்சியான டாக்டர் கே.ஆர். கரந்த் கூறியிருக்கிறார். “கர்நாடக மாநில நீர்ப்பாசனத் தேவைக்கு 35 சதவீத நிலத்தடி நீர் உள்ளது” என்று மத்திய அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையை நடுவர் மன்றம் தன் தீர்ப்பில் மேற்கோள் காட்டியிருக்கிறது. “பெங்களூர் மாநகரத்திற்கு 50 சதவீத குடிநீர் தேவை நிலத்தடி நீர் மூலம் கிடைக்கிறது” என்று காவிரி நடுவர் மன்றம் தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றை உச்சநீதிமன்றத்தின் முன்பு தமிழக அரசின் சார்பில் முறைப்படி எடுத்து வைத்து வாதிடவில்லை என்பதும், ஏற்கனவே காவிரி வழக்கில் தி.மு.க. ஆட்சி காலத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்களை அரசியல் காழ்ப்புணர்வினாலும் சொந்த காரணங்களுக்காவும் மாற்றியதால்தான் இன்றைக்கு தமிழகத்திற்கு உரிமையுள்ள காவிரி நீரில் 14.75 டி.எம்.சி.யை பறிகொடுக்கப்பட்டுள்ளது. டு தமிழக விவசாயிகள் தவிப்பதற்கு காரணம் அ.தி.மு.க. அரசின் திறனற்ற வாதங்கள்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை.
உச்சநீதிமன்றத்தில் வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர்களுக்கு நமது மாநில உரிமைகள் சார்ந்த உரிய தகவல்களை கொடுக்காமலும், அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமலும் தமிழகத்திற்கான காவிரி உரிமையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது திரு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு. தி.மு.கவின் முயற்சியில் வெளிவந்த இடைக்காலத் தீர்ப்பு, இறுதி தீர்ப்பு, காவிரி நதி நீர் ஆணையம் அனைத்தும் தமிழக நலன் சார்ந்தது என்று இப்போதாவது அதிமுக சார்பில் முதலமைச்சர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, 1924ல் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தெவித்திருப்பதும், 1974ல் தி.மு.கழக அரசு எடுத்த நிலைப்பாட்டை உறுதியும் செய்துள்ளது. எல்லா வகையிலும் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டத் தொடர்ச்சியாக செயல்பட்டிருப்பது தி.மு.க.தான் என்பதே வரலாறு.
ஆகவே இனியும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அறிக்கை விடுவதை நிறுத்திக் கொண்டு, காவிரியில் இழந்த 14.75 டி.எம்.சி. நீரை திரும்பப் பெறுவது எப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை இனியும் தாமதம் செய்யாமல் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது எப்படி என்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தையும், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தையும் உடனடியாக கூட்டி மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி பிரச்சினையில் தி.மு.கழகம் நடத்திய சட்டரீதியான உரிமைப் போராட்ட வரலாற்றையும் அதனால் ஏற்பட்ட ஆக்கபூர்வமான விளைவுகளையும் மறைக்க நினைப்பவர்களுக்கும், திரிக்க நினைப்பவர்களுக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் இந்த உண்மைகளை எடுத்துரைத்து, தமிழகத்தின் நலன் காப்பதில் எப்போதும் போல முனைப்புடன் செயல்பட வேண்டுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் ஸ்டாலின்.