காவிரியில் வெள்ளம் வந்தும் வாய்க்கால்களில் தண்ணீர் வராததற்கு தமிக அரசே பொறுப்பு: காவிரி மீட்புக்குழு

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் இன்று (16.08.2018) காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி. முருகேசன், காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் திரு. த. மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. க. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராசு, தாளாண்மை உழவர் இயக்கத் தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் பொறியாளர் சு. பழனிராசன், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், இந்தியன் யூனியன் முசுலீம் லீக் மாவட்டத் தலைவர் திரு. ஜெயனுல் ஆபுதீன், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், திருச்சி மாநகர்ச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. சிவவடிவேலு, தகவல் தொழில்நுட்பத் துறை திரு. தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக்குப் பிறகு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் 1 – காவிரிப் பாசனப் பகுதி மறுசீரமைப்புப் பெருந்திட்டம் உடனடித் தேவை!

 

காவிரியிலும், கொள்ளிடத்திலும் வெள்ளம் வந்துள்ள நிலையில் கூட கால்வாய்களில் தண்ணீர் வராத அவலம் நடந்து கொண்டுள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மட்டுமின்றி புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உழவர்கள் இதைக் கண்டித்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கட்டளைவாய்க்கால், உய்யகொண்டான் உள்ளிட்ட பல கால்வாய்களும், வாய்க்கால்களும் தூர் வாரப்படாததால், மேடாகியும் புதர் மண்டியும் கிடக்கின்றன. வாய்க்கால்களும் மேடிட்டு, செடி கொடிகள் மண்டிக் கிடக்கிறது. இதனால், வெள்ள நீர் ஆறுகளில் திறந்துவிடப்பட்டும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் போக முடியாததால் மேற்கண்ட ஐந்து மாவட்டங்களிலும் வேளாண்மைக்குத் தண்ணீரின்றி உழவர்கள் போராடுகிறார்கள். கள்ளப்பெரும்பூர், வடுவூர் உள்ளிட்ட பல பெரிய ஏரிகள் நிரம்பவில்லை.

 

தமிழ்நாடு அரசுப் பொதுப்பணித்துறையின் செயலற்றத்தன்மையே இதற்கு முதன்மைக் காரணம்!  அத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே இப்பாதிப்புக்கு நேரடி பொறுப்பாவார்!

 

தமிழ்நாடு அரசு, உடனடியாக நடப்பு சாகுபடிக்குப் பயன்படக் கூடிய வகையில், கடைமடை உட்பட எல்லா வாய்க்கால்களையும் போர்க்கால அடிப்படையில் தூர் வாரி செப்பனிட வேண்டும்.

அடுத்து, நிரந்தர பயனளிக்கக் கூடிய வகையில் காவிரி டெல்டா நீர் மேலாண்மையில் மாபெரும் மறுசீரமைப்புத் திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும். கொள்ளிடத்தில், முக்கொம்பிலிருந்து கீழணை வரை உள்ள 107 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளபடி 7 கதவணைகள் அடுத்த சாகுபடி பருவத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும்!

 

முக்கொம்பிலிருந்து கீழணை வரை 190 அடி அளவிற்கு நில அமைப்பு கீழ் நோக்கி சரிவாக உள்ளது நல் வாய்ப்பாகும்! அதேபோல், காவிரியில் தேவையான அளவுக்கு புதிய கதவணைகள் கட்ட வேண்டும். மேலும், கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி உள்ளிட்ட பல ஆறுகளில் அங்கங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். அனைத்து ஆறுகளையும் தூர் வாரி கரைகளை உயர்த்துவதுடன், கரைகளில் பக்கச் சுவர் எழுப்ப வேண்டும்.

 

இதற்கான திட்டத்தைத் தயாரித்து இந்திய அரசிடம் சிறப்பு நிதி பெற்று உடனடியாக செயல்படுத்த வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு – காவிரிப்பாசன மறுசீரமைப்புக் கட்டுமானம் குறித்து, கள ஆய்வு செய்து விவரங்களைத் திரட்ட 3 உண்மை அறியும் குழுக்களை அமைக்க இருக்கிறது. இக்குழுக்கள் முக்கொம்பிலிருந்து கடற்கரை வரை பகுதிகளை பிரித்துக் கொண்டு, கள ஆய்வு செய்து, அந்த ஆய்வறிக்கையை காவிரி உரிமை மீட்புக் குழுவுக்கு அளிக்கும். அவற்றின் அடிப்படையில், மாதிரி மறுசீரமைப்புத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அளிக்கும்.

 

தீர்மானம் – 2 – இராசிமணலில் அணை கட்டக் கோருவது  

கர்நாடகத்தின் சதித்திட்டத்திற்கு துணை போவதாக அமையும்!

 

தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள இராசிமணலில், காவிரி ஆற்றில் புதிய அணை கட்ட வேண்டுமென்று, தமிழ்நாட்டில் சில உழவர் அமைப்பினர் பரப்புரை செய்து வருகின்றனர். இது கர்நாடகத்தின் காவிரி மறுப்புத் திட்டத்திற்கு சாதகமானதாகவும், தமிழ்நாட்டின் காவிரி உரிமைக்கு பாதகமாகவும் அமையக்கூடியது!

 

காவிரி ஆற்றில் தமிழ்நாட்டு எல்லையில் உள்ள பில்லிகுண்டுலுவிலிருந்து 6 கிலோ மீட்டர் கீழே உள்ள இராசிமணலில், காவிரி ஆற்றின் இடது கரை தமிழ்நாட்டைச் சேர்ந்தது; வலது கரை  கர்நாடகத்தைச் சேர்ந்தது. கர்நாடக அரசின் ஒப்புதல் இல்லாமல், அங்கு தமிழ்நாடு அரசு அணை கட்ட முடியாது! ஒருவேளை, தமிழ்நாடு அரசு அணை கட்ட ஒப்புதல் கிடைத்தால், அந்தத் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு பயன்படாமல், கர்நாடகத்திற்கே பயன்படக்கூடிய நிலை ஏற்படும்.

 

கர்நாடக அரசு ஏற்கெனவே, மேக்கேத்தாட்டு – இராசிமணல் ஆகிய இடங்களில் காவிரியில் புதிய அணை கட்ட திட்டம் தயாரித்து, அதைச் செயல்படுத்தத் தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு அரசும் மேக்கேதாட்டு மற்றும் இராசிமணலில் கர்நாடக அரசு அணைகள் கட்டக்கூடாது என்று தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

 

இந்நிலையில், இராசிமணலில் தமிழ்நாடு அரசு அணை கட்ட வேண்டுமென்று கூறுவது, கர்நாடக அரசு மேக்கேதாட்டு மற்றும் இராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட போட்டுள்ள திட்டத்தை ஞாயப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

எனவே, வெள்ள நீரை சேமிப்பதற்கு இங்கு முதல் தீர்மானத்தில் கூறியுள்ளபடி தமிழ்நாட்டில் காவிரி டெல்டா ஆறுகளில் கதவணைகள், தடுப்பணைகள் போன்றவற்றைக் கட்டுவதும், பாசனக் கால்வாய்களை தூர் வாருவதும், ஏற்கெனவே உள்ள ஏரிகளுக்கு மட்டுமின்றி, புதிதாக பல ஏரிகள் மற்றும் குளங்களில் காவிரி நீரைத் தேக்க கால்வாய்கள் வெட்டுவதும், அந்த ஏரி – குளங்களை ஆழப்படுத்துவதும் நமக்கு உடனடித் தேவையாகும்!

இவற்றில் கவனம் செலுத்தி, இராசிமணல் அணைக்கட்டு யோசனையை மேற்கண்ட உழவர் அமைப்புத் தலைவர்கள் கைவிட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு உரிமையுடனும், அன்புடனும் கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம்  – 3 – காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில்

ஆணையமும் ஒழுங்காற்றுக்குழுவும் எங்கே போயின?

 

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி அமைக்கப்பட்ட காவிரி ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் என்ன செய்து கொண்டிருக்கின்றன? இவ்வளவு பெரிய வெள்ளக்காலத்தில்கூட எவ்வளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி அணைகளுக்குச் சென்று கள ஆய்வு நடத்தாமல் ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

 

செயல்படாத இந்த ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் எதற்காக அமைக்கப்பட்டுள்ளன? தமிழ்நாட்டை வஞ்சிப்பதற்காக மட்டும்தானா? ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு சற்றொப்ப மூன்று மாதங்கள் ஆன நிலையிலும், ஒழுங்காற்றுக் குழுவுக்கு பெங்களுருவில் அலுவலகம் அமைக்கப்படவில்லை; ஆணையத்திற்கு தில்லியில் தனி அலுவலகம் இல்லை!

 

தீர்ப்பு வந்தபோதே இந்த ஆணையம் செயல்படுமா என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஐயம் தெரிவித்தது. இப்போது அந்த ஐயம் மெய்ப்பிக்கப்பட்டதுபோல், செயலற்ற ஏட்டுச் சுரைக்காய் அமைப்பாக இவ்விரண்டு அமைப்புகளும் இருக்கின்றன.

 

ஆணையத்திலும், ஒழுங்காற்றுக் குழுவிலும் முழுநேர ஊதியத்தில், முழுநேர அதிகாரிகள்தான் பணியமர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கில்தான் இந்திய அரசு, நடுவண் நீர் ஆணையத்தில் ஏற்கெனவே பணியில் உள்ளவர்களைக் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக ஆணையப் பணியும், ஒழுங்காற்றுக் குழு பணியும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் இந்த துரோகத்திற்கு தமிழ்நாடு அரசும் துணைபோயுள்ளது!

 

ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவும் செயல்படாதவை என்று காவிரி உரிமை மீட்புக் குழு அச்சம் தெரிவித்தபோது, தமிழ்நாடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், காவிரியை மீட்டு விட்டதாக “வெற்றி விழா” கொண்டாடி கவனத்தை திசை திருப்பினர். இனியாவது அவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு, ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவிற்கு முழுநேர அதிகாரிகளை அமர்த்திடவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ளவாறு அவர்கள் அன்றாடம் செயல்படவும் வழிவகுக்கும் வகையில், புதிதாக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைத்திட தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்தி, அதைச் செயல்படுத்திட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு வேண்டுகோள் வைக்கிறது!

பெமணியரசன்

ஒருங்கிணைப்பாளர்காவிரி உரிமை மீட்புக்குழு

Cauvery meetpu kuzhu resolutions