காவிரி உரிமை மீட்புப் பயணம்: திருச்சியிலிருந்து ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது ..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது. வரும் 9-ம் தேதி அரியலூரில் இருந்து மற்றொரு குழு புறப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த 1-ம் தேதி முதல் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த 3-ம் தேதி கடையடைப்பும் நேற்று முன்தினம் முழுஅடைப்பு போராட்டமும் நடைபெற்றன.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் அனைத்துக் கட்சிக் கூட்டம், திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத் தில் நேற்று நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி, மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட திமுக தொண்டர் பிரபு, நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தீக்குளித்து உயிரிழந்த மதிமுக நிர்வாகி ரவி ஆகியோருக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது.

மேலும், முழுஅடைப்பு போராட்டத்தை பெரும் வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி கூறியும் தமிழகத்தின் எழுச்சியையும் கொந்தளிப்பையும் உணர்ந்து வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த கால அவகாசம் கேட்கும் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறை வேற் றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

ஏற்கெனவே கடந்த 1-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திருச்சி முக்கொம்பில் இருந்து 7-ம் தேதி, அரியலூரில் இருந்து வரும் 9-ம் தேதி இரு குழுக்களாக காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இரு பயணங்களையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைக்கிறார். இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியையும் கொந்தளிப்பையும் பார்த்த பிறகாவது மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அந்த நம்பிக்கையோடுதான் போராடி வருகிறோம். ஆனால், அதன்பிறகும் மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்தால் மீண் டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

காவிரி உரிமைக்காக போராடிய எங்கள் மீது எப்படிப்பட்ட வழக்கு கள் போட்டாலும், எத்தகைய தண்டனை அளித்தாலும் அவற்றை மகிழ்ச்சியோடும் முழுமனதோடும் ஏற்கத் தயாராக இருக்கிறோம். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என நாங்கள் கூறவில்லை. ஐபிஎல் போட்டி ஏற்பாட்டாளர்கள் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

இதன்படி, திருச்சி முக்கொம்பில் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஏப்.7) மாலை 4 மணிக்கு காவிரி உரிமை மீட்பு பயணம் நடக்கிறது. இதனை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகி தீன் தொடங்கி வைக்கின்றனர். இந்த பயணம் கல்லணையில் அன்றைய தினம் நிறைவடைகிறது.

அடுத்தடுத்த நாட்களில் டெல்டா மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் இந்தக் குழு, 12-ம் தேதி கடலூரில் பயணத்தை நிறைவு செய்கிறது. மறு நாள் 13-ம் தேதி காலை அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்படும் தலைவர்கள் சென்னை ஆளுநர் மாளிகைக்கு வந்து கோரிக்கை மனு அளிக்கின்றனர்.