காவிரி உரிமைகள் மீட்பு 3வது நாள் பயணம் : தஞ்சையில் இருந்து தொடங்கினார் ஸ்டாலின்..

காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் இருந்து தொடங்கியுள்ளார். ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக பலகட்ட போராட்டங்களை நடத்தியது.

இதன் அடுத்தகட்டமாக திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். கடந்த ஏப்ரல் 7ம் தேதி பிற்பகலில் திருச்சி முக்கொம்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். இரண்டாவது நாளாக நேற்று தஞ்சாவூர் சூரக்கோட்டைகியல் இருந்து ஸ்டாலின் மீண்டும் பயணத்தை தொடங்கினார்.

இது அரசியலுக்காக நடைபெறும் பயணம் அல்ல, தமிழக உரிமையை மீட்டெடுக்கும் பயணம் என்ற ஸ்டாலின் கூறி வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அண்ணப்பன்பேட்டையில் இருந்து ஸ்டாலின் 3வது நாள் பயணத்தை தொடங்கியுள்ளார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், டி. ஆர்.பாலு, விவசாய சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். சாலையின் இரு பக்கத்திலும் விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு நின்று ஸ்டாலின் பயணம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அகன்ற காவிரி தற்போது வறண்ட காவிரியாக இருப்பதாக விவசாயிகள் மு.க.ஸ்டாலினை சந்தித்து வேதனை தெரிவித்து வருகின்றனர். அன்னப்பன்பேட்டையில் தொடங்கியுள்ள ஸ்டாலினின் நடைபயணம் திருக்கருக்காவூர், அம்மாபேட்டை வரை என பிற்பகல் வரை நடைபெற உள்ளது. பிற்பகலுக்குப் பிறகு கும்பகோணம் வழியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இன்றைய நடைபயணமானது முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.