முக்கிய செய்திகள்

காவிரி மீட்பு நடைபயணம்: திருவாரூரில் ஸ்டாலினின் 4வது நாள் பயணம் தொடங்கியது..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணம் 4வது நாளாக தொடர்கிறது. திருவாரூரில் இருந்து ஸ்டாலின் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளார். காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பயன்தரும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி திமுக பல கட்ட போராட்டங்களை முன்எடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ஸ்டாலின் மேற்கொள்ளும் இந்த நடைபயணம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 3 நாட்கள் இந்த நடைபயணம் முடிந்துள்ள நிலையில் இன்று 4வது நாளாக காவிரி உரிமைகள் மீட்புப் பயணம் திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளது.

திருவாரூரில் தன்னுடைய வீட்டில் இருந்து தொடங்கியுள்ள நடைபயணமானது பவித்ரமாணிக்கம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். கோட்டூர், குழிக்கரை வழியாக திருத்துறைப்பூண்டியை நடைபயணம் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலையில் ஸ்டாலின் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி கூட்டத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் நாகப்பட்டினம் செல்ல உள்ளார். வழி நெடுகிலும் ஸ்டாலினை சந்தித்து விவசாயிகளும், பொதுமக்களும் நடைபயணம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்